மோடியை அழைத்த புதின்.. ரஷ்யாவுக்கு விரையும் பிரதமர்.. பிரிக்ஸ் மாநாட்டுக்கு நடுவே நடக்கும் சம்பவம்
டெல்லி: அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி வரும் 22 - 23 ஆகிய தேதிகளில் ரஷ்யா சென்று பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க உள்ளார். ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு ரஷ்யா சென்ற பிரதமர் மோடி இந்த ஆண்டில் 2 வது முறையாக அங்கு விசிட் செய்ய உள்ளார். உக்ரைன் போருக்கு நடுவே பிரதமர் மோடி அடுத்தடுத்து ரஷ்யா செல்வதை உலக நாடுகள் உற்று கவனிக்க தொடங்கி உள்ளன.
ஒவ்வொரு நாடுகளும் தங்களின் நட்பு நாடுகள் மற்றும் அண்டை நாடுகளுடன் சேர்ந்து பல்வேறு கூட்டமைப்புகளை உருவாக்கி உள்ளன. அப்படியான ஒரு கூட்டமைப்பு தான் பிரிக்ஸ் (BRICS).

இந்த பிரிக்ஸ் கூட்டமைப்பு முதலில் பிரிக் (BRIC) என்று அழைக்கப்பட்டது. அதாவது ‛பிரிக்’ கடந்த 2006ல் உருவாக்கப்பட்டது. இதில் முதலில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் மட்டுமே அங்கம் வகித்தன. அப்போது இந்த 4 நாடுகளின் முதல் எழுத்துகளை வைத்து பிரிக் (BRIC) என்று அந்த கூட்டமைப்புக்கு பெயர் சூட்டப்பட்டது.
அதன்பிறகு தென்ஆப்பிரிக்கா 2011ல் இணைந்தது. இதையடுத்து தென்ஆப்பிரிக்காவின் முதல் ஆங்கில எழுத்தான S என்பது சேர்க்கப்பட்டது. இதையடுத்து தான் இந்த பிரிக் கூட்டமைப்பு பிரிக்ஸ் (BRICS)என மாற்றம் செய்யப்பட்டது. இந்த கூட்டமைப்பில் தற்போது 5 நாடுகள் உள்ளன.
பாகிஸ்தானில் கால்வைத்த ஜெய்சங்கர்.. பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வரவேற்றது எப்படி தெரியுமா? டின்னர் ஸ்பெஷல்
இந்த பிரிக்ஸ் கூட்டமைப்பு என்பது உலகத்தில் உள்ள பல்வேறு முக்கிய நாடுகளின் கூட்டமைப்புகளில் மிகவும் முக்கியமாகும். ஏனென்றால் உலகில் உள்ள மக்கள் தொகையில் 41 சதவீதம் பேர் இந்த பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள 5 நாடுகளில் வசிக்கின்றனர். அதேபோல் உலகளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த நாடுகள் தான் 24 சதவீதம் வரை பங்களிப்பு செய்வதோடு, உலக வர்த்தகத்தில் 16 சதவீதத்துக்கும் அதிகமாக இந்த நாடுகள் தான் பங்களிக்கிறது.
இந்நிலையில் தான் 2024ம் ஆண்டுக்கான பிரிக்ஸ் உச்சிமாநாடு என்பது ரஷ்யாவில் நடைபெற உள்ளது. பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு தற்போது ரஷ்யா தலைமையேற்றுள்ளது. இதனால் ரஷ்யாவின் கஸான் நகரில் நடைபெற உள்ளது. இத்தகைய சூழலில் தான் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கும்படி பிரதமர் மோடிக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். அதனை பிரதமர் மோடியும் ஏற்றுள்ளார். இதையடுத்து அக்டோபர் 22, 23 ஆகிய தேதிகளில் ரஷ்யாவில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
இந்த பிரிக்ஸ் மாநாடு என்பது ‛‛உலகளாவிய மேம்பாடு மற்றும் பாதுகாப்புக்கான பன்முகத்தன்மையை வலுப்படுத்துதல்’’ என்ற கருப்பொருளை (Theme) அடிப்படையாக கொண்டு நடைபெற உள்ளது. அதுதொடர்பாக பிரிக்ஸ் மாநாட்டில் தலைவர்கள் விவாதிக்க உள்ளனர். இந்த பயணத்தின்போது பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள பிற நாடுகளின் தலைவர்களுடன் இருநாடுகளின் உறவு பற்றி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். குறிப்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் 22ம் தேதி தனியாக பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார்.
இந்நிலையில் தான் பிரிக்ஸ் மாநாட்டுக்காக பிரதமர் மோடி ரஷ்யா செல்ல இருப்பதை நம் நாட்டின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இதுதொரட்பாக அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‛‛பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 22 - 23 ஆகிய நாட்கள் ரஷ்யா சென்று பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த மாநாடு என்பது பிரிக்ஸ் சார்பில் எடுக்கப்பட்ட முன்முயற்சிகளின் நிலவரம் ப்ற்றி மதிப்பீடு செய்யவும், எதிர்காலத்துக்கு தேவையான ஒத்துழைப்புகள் பற்றி விவாதிக்கவும் வழிவகுக்கும்’’ என கூறப்பட்டுள்ளது.
பச்சை நிற டீசர்ட் + டிராக் பேண்ட்.. பாகிஸ்தானில் ஜாலியாக வாக்கிங் போன ஜெய்சங்கர்.. என்ன நடந்தது?
‛பிரிக்’ என தொடங்கி தற்போது ‛பிரிக்ஸ்’ என பெயர் மாற்றம் பெற்றுள்ள இந்த கூட்டமைப்பின் முதல் உச்சி மாநாடு என்பது கடந்த 2006ல் முதல் முதலாக ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடந்தது. அதன்பிறகு 2009ல் ரஷ்யாவின் யக்டீரின்பர்க் நகரில் நடந்தது. அதன்பிறகு 2015ல் ரஷ்யாவின் யுஎப்ஏ, 2020ல் கொரோனாவால் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடக்க வேண்டிய உச்சி மாநாடு வீடியோ கான்பரன்ஸ் வழியாக நடந்தது. இப்போது மீண்டும் ரஷ்யாவில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பிரதமர் மோடி இந்த ஆண்டில் 2வது முறையாக ரஷ்யா செல்ல உள்ளார். பிரதமர் மோடி கடந்த ஜூலை மாதம் ரஷ்யா சென்றார். அப்போது 22வது இந்தியா - ரஷ்யா ஆண்டு மாநாட்டில் பங்கேற்றார். அப்போது அவர் பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் இருநாடுகளின் இடையேயான உறவு பற்றி விவாதித்தனர். அதோடு பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருதான செயின்ட் ஆண்ட்ரு தி அப்போஸ்தல் விருது என்பது வழங்கப்பட்டது. இத்தகைய சூழலில் தான் 4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பிரதமர் மோடி ரஷ்யா செல்கிறார்.
இந்த வேளையில் பிரதமர் மோடி மீண்டும் உக்ரைன் மீதான போர் நடவடிக்கையை கைவிட வேண்டும். பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்று எடுத்து கூற வாய்ப்புள்ளது. பிரதமர் மோடி ஒவ்வொரு முறையும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார். அதேபோல் விளாடிமிர் புதினும் கூட பிரதமர் மோடி எனக்கு நண்பர். அவர் ரஷ்யா - உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தால் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம் என்று கூறியிருந்தார். இதனால் தான் பிரதமர் மோடியின் ரஷ்யா பயணத்தை உலக நாடுகளும் உன்னிப்பாக கவனிக்க தொடங்கி உள்ளன.












Click it and Unblock the Notifications