20 ஆயிரம் தமிழ் பெண்கள்.. வேலூரில் செய்த தரமான “சம்பவம்”.. மன் கி பாத்தில் பாராட்டிய மோடி
டெல்லி: இன்று 100 வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வேலூர் நாகநதியை 20 ஆயிரம் பெண்கள் இணைந்து புத்துயிர் ஊட்டியதாக பாராட்டி இருக்கிறார்.
பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று 100 வது மன் கி பாத் உரையை ஆற்றினார். அப்போது பேசிய அவர், "இன்று மனதின் குரலுடைய 100ஆவது பகுதி. உங்களுடைய ஆயிரக்கணக்கான கடிதங்கள் எனக்குக் கிடைத்திருக்கின்றன, லட்சோப லட்சம் செய்திகள் வந்திருக்கின்றன.
முடிந்த மட்டிலும் அதிகபட்ச கடிதங்களைப் படிக்க வேண்டும், பார்க்க வேண்டும், செய்திகளைப் புரிந்து கொள்ள முயல வேண்டும் என்று விரும்பியிருக்கிறேன். உங்களுடைய கடிதங்களைப் படிக்கும் வேளைகளில் பல சமயம் நான் உணர்ச்சிவயப்பட்டேன், உணர்வுகளில் அமிழ்ந்து போனேன், உணர்வுகளால் ஆட்கொள்ளப்பட்டேன், அடித்துச் செல்லப்பட்டேன், ஆனால் ஒருவழியாக, என்னையே நான் நிதானித்தும் கொண்டேன்.

நீங்கள் மனதின் குரலுடைய 100ஆவது பகுதிக்காக பாராட்டுக்களைத் தெரிவித்திருக்கிறீர்கள் ஆனால், உள்ளத்தில் உள்ளதை உள்ளபடியே உரைக்கிறேனே - பாராட்டுக்களுக்கு மொத்தச் சொந்தக்காரர்கள், மனதின் குரலின் நேயர்களான நீங்களும், நம்முடைய நாட்டு மக்கள் மட்டுமே. மனதின் குரல் கோடான கோடி பாரத நாட்டவர்களுடைய மனங்களின் குரல், அவர்களுடைய உணர்வுகளின் வெளிப்பாடு.
2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி, விஜயதசமி நன்னாளன்று நாமனைவரும் இணைந்து மனதின் குரல் யாத்திரையைத் தொடக்கினோம். பல வேளைகளில், மனதின் குரல் தொடங்கப்பட்டு இத்தனை மாதங்கள் ஆகி விட்டன, இத்தனை ஆண்டுகள் உருண்டோடி விட்டன என்பதை நம்பக் கூட முடியவில்லை. இதன் ஒவ்வொரு பகுதியுமே விசேஷமானதாக இருந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும், புதிய எடுத்துக்காட்டுகளின் நவீனம், ஒவ்வொரு முறையும் நாட்டுமக்களின் புதிய வெற்றிகளின் வீச்சு.
மனதின் குரலில் ஒட்டுமொத்த நாட்டின் மூலை முடுக்கெங்கும் உள்ள மக்கள் இணைந்தார்கள், அனைத்து வயதுக்காரர்கள், பிரிவினர்களும் இணைந்தார்கள். பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கல்வியளிப்போம் ஆகட்டும், தூய்மை பாரதம் இயக்கம் ஆகட்டும், கதராடைகளின் மீதான அன்பாகட்டும், இயற்கை பற்றிய விஷயமாகட்டும், சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவாகட்டும், அமுத நீர்நிலைகளாகட்டும், மனதின் குரலானது எந்த விஷயத்தோடு இணைந்ததோ, அது மக்கள் இயக்கமாக மாறியது, இதை நீங்கள் தான் அப்படி ஆக்கினீர்கள்.
அப்போதைய அமெரிக்க குடியரசுத் தலைவர் ஓபாமா அவர்களோடு மனதின் குரலில் பங்கெடுத்த போது, இது உலகெங்கிலும் ஒரு விவாதப் பொருளானது. மனதின் குரலில் நாம் நம் நாட்டின் பெண் சக்தியின் உத்வேகம் அளிக்கவல்ல பல நிகழ்வுகள் - எடுத்துக்காட்டுகள் பற்றிப் பேசியிருக்கிறோம் என்பது பெரும் நிறைவை அளிக்கிறது.

நமது இராணுவமாகட்டும், விளையாட்டு உலகமாகட்டும், நான் எப்போதெல்லாம் பெண்களின் சாதனைகள் பற்றி பேசினேனோ, அப்போதெல்லாம் அவர்களை மனம் நிறையப் பாராட்டியிருக்கிறேன். நாம் சத்தீஸ்கட்டின் தேவுர் கிராமத்தின் பெண்களைப் பற்றிப் பேசியிருந்தோம். இந்தப் பெண்கள் சுயஉதவிக் குழுக்கள் வாயிலாக, கிராமங்களின் நாற்சந்திகள், சாலைகள், கோயில்களில் தூய்மைப்பணி செய்வது என்பதை இயக்கமாகச் செய்து வருகிறார்கள்.
இதைப் போலவே தமிழ்நாட்டின் பழங்குடியினப் பெண்கள், சூழலுக்கு நேசமான ஆயிரக்கணக்கான சுடுமண் கோப்பைகளை ஏற்றுமதி செய்தார்கள், இவர்களிடமிருந்தும் தேசம் நன்கு உத்வேகம் பெற்றது. தமிழ்நாட்டிலேயே 20000 பெண்கள் ஒன்றிணைந்து வேலூரில் இருக்கும் நாக நதிக்கு புத்துயிர் ஊட்டினார்கள். இப்படி எத்தனை எத்தனையோ இயக்கங்களுக்கு நமது பெண்கள் சக்தி தான் தலைமை தாங்கியது, மனதின் குரல் அவர்களின் முயற்சிகளை முன்னிறுத்தக் கூடிய ஒரு மேடையாக மாறியது."என்று தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications