எந்த பிரதமரும் நெருங்க கூட இல்லை.. சுதந்திர தின உரையில் மோடி வைத்த ரெக்கார்டு.. இவ்ளோ நேரமா?
டெல்லி: பிரதமர் மோடி 10 வது முறையாக டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார். அதன்பிறகு நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரை நிகழ்த்தினார். பிரதமர் மோடி, 10 ஆண்டுகளில் அதிகபட்சமாக எவ்வளவு நேரம் சுதந்திர தின உரை நிகழ்த்தியிருக்கிறார் என்ற விவரங்களை பார்க்கலாம்.
இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி, தேசியக் கொடி ஏற்றி உரை நிகழ்த்தினார். பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றுவது இது 10-வது முறையாகும். கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் பிரதமர் மோடி தொடர்ந்து சுதந்திர தின உரை நிகழ்த்தியுள்ளார்.

2024-ம் ஆ ண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி பேசிய உரை மிகவும் கவனிக்கப்பட்டது. பிரதமர் மோடி தனது உரையில், அடுத்த 5 ஆண்டுகளில் யாரும் எதிர்பாராத வளர்ச்சியை நாடு அடையும். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றும் நடவடிக்கைகள் அடுத்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும் என்றார்.
மேலும், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதியன்று இதே செங்கோட்டையில் இருந்து நாடு சாதித்த வளர்ச்சிகளை உங்கள் முன் சமர்ப்பிப்போம் என்று பேசினார். மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையை பிரதமர் மோடி வெளிப்படுத்தியதை அவரது இந்த உரை காட்டுவதாக இருந்தது. பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகு அவரது சுதந்திர தின உரை மிகவும் கவனிக்கப்படும் ஒன்றாக மாறியிருக்கிறது.
தலைப்பாகை அணிந்த படி சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் முழங்கும் பிரதமர் மோடி, தனது பேச்சில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக பிரதமர் மோடியின் உரை ஒரு மணி நேரத்தை சர்வ சாதாரணமாக கடந்து விடும் என்பதை, மோடியின் சுதந்திர தின உரையை கவனிப்பவர்களுக்கு தெரியும். அந்த வகையில், நடப்பு ஆண்டில் பிரதமர் மோடி 89 நிமிடங்கள் சுதந்திர தின உரையாற்றியுள்ளார்.
இதுவரை அதாவது, கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி எவ்வளவு நேரம் சுதந்திர தின உரையை நிகழ்த்தியுள்ளார் என்ற விவரங்களை பார்க்கலாம். பிரதமர் மோடி தனது முதல் சுதந்திர தின உரையை அதாவது கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி செங்கோட்டையில் 65 நிமிடங்கள் பேசினார். 2015 ஆம் ஆண்டு 86 நிமிடங்கள் மோடியின் சுதந்திர தின உரை அமைந்தது.
1947 -ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹவர்லால் நேரு 72 நிமிடங்கள் சுதந்திர தின உரையாற்றியதே, அதுவரை சுதந்திர தின நாளில் ஒரு பிரதமரின் நீண்ட நேர உரையாக இருந்தது. இதனை பிரதமர் மோடி கடந்த 2015 ஆம் ஆண்டு முறியடித்தார். 2016 ஆம் ஆண்டு 94 நிமிடங்கள் பிரதமர் மோடி உரையாற்றினார்.
2017 ஆம் ஆண்டு பிரதமர் மோடி வெறும் 56 நிமிடங்களே பேசினார். இதுவே சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி மிகக் குறைந்த நேரம் நிகழ்த்திய உரை ஆகும். 2018 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று 80 நிமிடங்கள் உரையாற்றிய பிரதமர் மோடி, 2019 ஆம் ஆண்டு 92 நிமிடங்கள் நாட்டு மக்கள் மத்தியில் பேசினார். 2020 ஆம் ஆண்டு 92 நிமிடங்களும் 2021 ஆம் ஆண்டு 88 நிமிடங்களும் பேசினார். 2022 ஆம் ஆண்டு 82 நிமிடங்கள் உரையாற்றினார். 10 வது சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி 89 நிமிடங்கள் பேசினார்.












Click it and Unblock the Notifications