அப்பம்.. பணியாரம்.. சட்டென தம்பிதுரை பக்கத்தில் அமர்ந்த மோடி.. போட்டிபோடுங்க.. ஆஹா அப்படி சொன்னாராமே
டெல்லி: கடந்த திங்கள் கிழமையில் இருந்து ராஜ்ய சபா எம்பிக்களை சந்தித்து பிரதமர் மோடி அவர்களுக்கு விருந்து வைத்து வருகிறார். இதன் ஒரு கட்டமாக நேற்று தமிழ்நாட்டு ராஜ்ய சபா எம்பிகளை சந்தித்து அவர்களுக்கு விருந்து கொடுத்தார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரம் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் பேச பிரதமர் மோடி மறுத்து வருகிறார்.

இதனால் நாடாளுமன்றத்திற்கே பிரதமர் மோடி வருவது இல்லை. நாடாளுமன்றம் வரும் பிரதமர் மோடி, அவை நிகழ்வுகள் எதிலும் கலந்து கொள்வது இல்லை. அவர் நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து பேச வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன.
ஆனால் எதிர்கட்சிகள் குரலுக்கு பிரதமர் மோடி இதுவரை செவிமடுக்கவில்லை. இந்த நிலையில்தான் கடந்த திங்கள் கிழமையில் இருந்து ராஜ்ய சபா எம்பிக்களை சந்தித்து பிரதமர் மோடி அவர்களுக்கு விருந்து வைத்து வருகிறார். என்டிஏ கூட்டணியை சேர்ந்த எம்பிக்கள் மட்டுமே இந்த விருந்தில் கலந்து கொள்கின்றனர். இதன் ஒரு கட்டமாக நேற்று தமிழ்நாட்டு ராஜ்ய சபா எம்பிகளை சந்தித்து அவர்களுக்கு விருந்து கொடுத்தார்.
இந்த விருந்தில் அதிமுக ராஜ்ய சபா எம்பி தம்பிதுரை அருகில் மோடி அமர்ந்து இருந்தார். இன்னொரு பக்கம் தமிழ் மாநில காங்கிரஸ் ஜிகே வாசன் அமர்ந்து இருந்தார். இந்த சந்திப்பில் பணியாரம், அப்பம், புளியோதரை, பருப்பு சாதம் போன்றவை உணவாக வழங்கப்பட்டு உள்ளன.
இந்த தினசரி விருந்தில் எம்பிகளுக்கு முக்கியமான அறிவுரைகளை பிரதமர் மோடி வழங்கி இருக்கிறார். அதில், எல்லா ராஜ்ய சபா எம்பிக்களும் ஒருமுறையாவது மக்களை சந்தித்து தேர்தலில் போட்டியிட வேண்டும். அதாவது லோக்சபாவிற்கு போட்டியிட வேண்டும். கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து செயல்பட வேண்டும்.
பாஜக தொடர்ந்து கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது. இனியும் ஆதரவு அளிக்கும். நாம் ராமர் கோவில் போன்ற விவகாரங்களை மட்டும் வைத்து வாக்கு கேட்க கூடாது. மக்களுக்கு நாம் நல்லது செய்ய வேண்டும். நாம் செய்யும் நல்லதை வைத்து வாக்கு கேட்க வேண்டும். ராஜ்ய சபா எம்பிக்கள் இதை சொல்லி லோக்சபா தேர்தலிலும் போட்டியிட்டு பார்க்க வேண்டும்.
பாஜக கூட்டணி மீண்டும் கண்டிப்பாக ஆட்சிக்கு வரும். தென் மாநில கட்சிகளோடு நாங்கள் நெருக்கமாக இருந்துள்ளோம். உதாரணமாக அதிமுகவோடு பல காலமாக நாங்கள் நட்பாக இருந்துள்ளோம். ஆட்சியில் இல்லாத போது கூட அதிமுகவுடன் நாங்கள் நட்பாக இருந்துள்ளோம்.
25 வருடங்களாக என்டிஏ கூட்டணி சிறப்பாக உள்ளது. ஒரு நபருக்காக இந்த கூட்டணி உருவாக்கப்படவில்லை. இந்த கூட்டணி ஒரு கொள்கைக்காக உருவாக்கப்பட்டது. நாம் ஆட்சி அமைப்பதை விட மக்களுக்கு சேவை ஆற்றவே தேர்தலை சந்திக்க வேண்டும். கூட்டணி கட்சிகளை பாஜக எப்போதும் அனுசரித்து செல்லும் என்று மோடி இந்த கூட்டத்தில் பேசினார்.
கடந்த சில நாட்களாக பாஜக என்டிஏ கூட்டணி கட்சிகளுடன் நெருக்கம் ஆகி வருகிறது. எதிர்க்கட்சிகள் கூட்டணி வலுவான நிலையில் மோடி என்டிஏ கூட்டணி தலைவர்களை சந்திக்க தொடங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications