ராணி வேலு நாச்சியாரின் தீரம்.. தலைமுறை தாண்டியும் உத்வேகம் அளிக்கும்.. தமிழில் புகழ்ந்த பிரதமர் மோடி
டெல்லி: "ராணி வேலு நாச்சியாரின் தீரம் தலைமுறை தாண்டியும் உத்வேகம் அளிக்கும்" என்று பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுவதை ஒட்டி, தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.
தென் இந்தியாவை காட்டிலும் வட இந்தியாவைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள்தான் அதிகம் கொண்டாடப்படும் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி, வீரமங்கை வேலு நாச்சியாரின் பிறந்தநாளுக்கு தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

வீரத்தின் மறுபெயர் வேலுநாச்சியார்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 1730-ம் ஆண்டு ஜனவரி மாதம் 3-ந் பிறந்த வேலு நாச்சியார், முதல் சுதந்திர போருக்கு முன்பாகவே வெள்ளையரை எதிர்த்து போராடினார். ராமநாதபுரம் சமஸ்தானம் மன்னர் செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி - சக்கந்தி முத்தாத்தாள் தம்பதிக்கு ஒரே மகளாக வேலுநாச்சியார் பிறந்தார். ஆயுதப் பயிற்சி, போர்ப் பயிற்சி, குதிரை ஏறும் பயிற்சி என அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார் வேலு நாச்சியார். பல மொழிகளிலும் அவர் புலமை பெற்று விளங்கினார். தனது 16 வது வயதில் அதாவது 1746-ம் ஆண்டு சிவகங்கைச் சீமை மன்னர் முத்துவடுகநாதத்தேவரை மணந்து கொண்டார். 1772-ம் ஆண்டு ஆற்காட்டு நவாப் மற்றும் ஐரோப்பியரின் படையெடுப்பால் கணவரை இழந்த வேலுநாச்சியார், நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதுமுதல், ஆங்கிலேயருக்கு எதிரான பல கிளர்ச்சிகளை அவர் முன்னெடுத்தார். இவரது வீரத்தை கண்டு ஹைதர் அலியும் அவருக்கு பல உதவிகளை செய்தார்.

முதல் தற்கொலை படை தாக்குதல்
உளவுத்தகவல்கள் மூலம் ஆங்கிலேயரின் ஆயுத கிடங்கு பற்றிய தகவலை அறிந்து கொண்டு, அங்கு தற்கொலை தாக்குதலை செயல்படுத்த திட்டமிட்டார். ஆங்கிலேயரின் ஆயுதக்கிடங்கை அறிந்த பிறகு அதன் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த ஏற்பாடு செய்தார் இந்தியாவில் நடத்தப்பட்ட முதல் தற்கொலைப்படை தாக்குதல் இதுதான். இந்த தற்கொலை தாக்குதலில் தனது நம்பிக்கைக்குரிய பெண் தளபதி குயிலியையும் வேலுநாச்சியார் இழந்தார். ஆங்கிலேயரையும் ஆர்காட் நவாப்பையும் போரில் வென்ற வேலுநாச்சியார், அதன்பிறகு 10 ஆண்டுகள் வெற்றிகரமாக ஆட்சி செய்தார். 1796-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ந் தேதி வீரமங்கை வேலு நாச்சியார் மரணம் அடைந்தார். இந்திய சுதந்திர போராட்டத்திற்கு முதன் முதலாக தூபம் போட்ட வேலுநாச்சியார் தமிழர்களின் மனதில் மட்டும் அல்லாது இந்தியர்களின் எண்ணத்திலும் நீங்கா இடம் விட்டு சென்றுள்ளார்.

வேலு நாச்சியாரை கொண்டாடும் பாஜக
தென் இந்தியாவை ஒப்பிடுகையில், வட இந்தியாவைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களே மக்களால் அதிகம் கொண்டாடப்படுகிறார்கள். ஜான்சி ராணி லட்சுமி பாய்க்கு கிடைத்த புகழில் பெருமையில் 5 சதவீதம் கூட தமிழகத்தின் வீரமங்கை வேலு நாச்சியாருக்கு கிடைக்காமல் இருந்தது. இதனிடையே, பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்தது முதலாக, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது அதிகரித்தது. தமிழகத்தை பொறுத்தவரை, மருது சகோதரர்கள், வேலு நாச்சியார், அழகுமுத்து கோன், வ.உ. சிதரம்பரனார் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகள் அங்கீகரிக்கப்படுவதை காண முடிகிறது.

தமிழில் ட்வீட்
இந்நிலையில், வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை ஒட்டி, அவரை புகழ்ந்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழில் பதிவிடப்பட்டுள்ள அந்த ட்வீட்டில், "வீர மங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி. தம் மக்களுக்கு நீதி கிடைக்க அவர் முன் நின்று போராடினார். காலனி ஆதிக்கத்தை தீவிரமாக எதிர்த்ததுடன், சமூக நன்மைக்காகவும் வேலு நாச்சியார் பணியாற்றினார். அவரது தீரம் தலைமுறை தாண்டியும் உத்வேகம் அளிக்கும்" என மோடி குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications