கருகிய நிலையில் பெண் உடல்..அலறிப் போன டெல்லி! பலருடன் தொடர்பிலிருந்ததால் கொலை செய்த சகோதரர்கள்!
டெல்லி: கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சி ஓய்வதற்குள் டெல்லியில் இளம்பெண் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் டெல்லியில் இளம்பெண் பல ஆண்களுடன் தொடர்பில் இருந்ததால் அவரது சகோதரர்களே அவரை தீயிட்டு எரித்துக் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களையும், பெற்றோர்களையும் மிகவும் கவலை கொள்ள செய்துள்ளது,

குறிப்பாக டெல்லி, ஹரியான, ராஜஸ்தான், உத்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. மத்திய அரசும் மாநில அரசுகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்தனர். மேலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. இந்த நிலையில் இந்த அதிர்ச்சி ஓய்வதற்குள் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. விசாரணையில் வந்த தகவல் தான் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மத்திய டெல்லி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 35 வயதான இளம் பெண் ஒருவரின் சடலம் எரித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியானதால் டெல்லி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் போலீசார் சாதுரியமாக விசாரணை நடத்தினர். உடற்கூறு ஆய்வின் அடிப்படையில் அந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படவில்லை கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட பிறகு உடல் எரிக்கப்பட்டிருக்கிறது என்பதை போலீசார் கண்டறிந்தனர்.
கொலை தொடர்பாக உறவினர்கள், சகோதரர்கள் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதை அடுத்து இளம் பெண்ணை கொலை செய்ததாக அவரது இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக டெல்லி காவல் சரக துணை கமிஷனர் ஹர்ஷவர்தன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்," 35 வயது இளம்பெண் கொலை தொடர்பாக அவரது சகோதரர்களான அப்துல்லா மற்றும் ஆரிஃப் ஆகியோரை போலீசார் கைது செய்து இருக்கின்றனர். அவர் ஏன் கொலை செய்யப்பட்டார் ஏன் உடல் எரிக்கப்பட்டது என தீவிரமாக விசாரணை நடத்தினோம்.
அவரது வீட்டிலேயே உடல் மீட்கப்பட்ட நிலையில் அப்பகுதிக்கு வந்து சென்றது யார் என சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு நடத்தப்பட்டது. ஆனால் சந்தேகப்படும்படியாக யாரும் செல்லவில்லை .இதை அடுத்து அந்த பெண்ணின் சகோதரர்களை பிடித்து விசாரித்த போது தங்கள் சகோதரியை தாங்களே கொன்றதை ஒப்புக்கொண்டனர். அப்பெண்ணுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி கணவருடன் விவாகரத்து ஆகியுள்ளது.
இதை அடுத்து அப்பகுதியைச் சேர்ந்த பலருடன் அந்த பெண்ணுக்கு முறையற்ற உறவு இருந்துள்ளது. பல ஆண்களுடன் தொடர்பு கொண்டிருப்பதாக சந்தேகித்த அவரது சகோதரர்கள் அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இது குறித்து கேட்டபோது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்ட நிலையில் அவரை கழுத்தை நெறித்து கொலை செய்ததோடு, பெட்ரோல் ஊற்றி உடலை எரித்துள்ளனர். தற்போது இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்" என்றார்.












Click it and Unblock the Notifications