குண்டுகட்டாக தூக்கிய போலீஸ்.. இறுதிவரை திமிறிய பிரியங்கா காந்தி.. காங்கிரஸ் போராட்டத்தில் பரபர!
டெல்லி: மத்திய பாஜக அரசுக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தில் பிரியங்கா காந்தி குண்டுகட்டாக தூக்கி செல்லப்பட்டு கைது செய்யப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்தியாவில் நிலவி வரும் வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும் எனக்கூறி காங்கிரஸ் சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதோடு ஒவ்வொரு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவததோடு, ஆளுவர் மாளிகையை நோக்கி ஊர்வலம் செல்ல உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தொடங்கிய போராட்டம்
இந்த நிலையில் டெல்லியில் காங்கிரஸ் கட்சி எம்பி ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து, பாஜக அரசு செய்து வரும் தவறுகளையும், பொருளாதார கொள்கையையும் ஆவேசமாக விமர்சித்தார். இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினரின் போராட்டம் நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் அதிகாலை முதலே ஏராளமான காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கூடிய நிலையில், டெல்லியிலும் போராட்டம் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் பாஜக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து நடைபெற்ற காங்கிரஸ் போராட்டத்தில் இடைக்காலத் தலைவர் சோனியா, ராகுல் காந்தி, வேணுகோபால் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இந்த போராட்டத்தில் விலைவாசி உயர்வை திரும்பப் பெற வேண்டும், ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் கோஷமிட்டு வருகின்றனர்.

ராகுல் காந்தி கைது
பின்னர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணியை தொடங்கினார். இதில் ஏராளமானோர் பங்கேற்று பாஜக அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இந்தப் பேரணியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர். நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கி ஜனாதிபதி மாளிகையை நோக்கி பேரணி சென்ற நிலையில், காவல்துறையினர் ராகுல் காந்தியை கைது செய்தனர்.

பிரியங்கா காந்தி கைது
இதேபோல் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கூடி இருந்தனர். இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் கலந்துகொள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் சச்சின் பைலட் ஆகியோர் கறுப்பு உடையும் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தனர். அப்போது தரையில் அமர்ந்து பிரியங்கா காந்தி ஆவேசமாக கோஷம் எழுப்பினார். பின்னர் பிரியங்கா காந்தி மற்றும் கட்சி நிர்வாகிகளை குண்டுகட்டாக தூக்கி சென்று காவல்துறையினர் கைது செய்தனர்.

ஹரீஷ் ராவத் கைது
இதேபோல் போராட்டத்தில் கலந்துகொண்ட உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத்தை அலேக்காக காவல்துறையினர் தூக்கிச் சென்று கைது செய்யப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications