நேபாள அரசியலில் திடீர் பரபரப்பு.. பிரதமர் பிரசாந்தாவின் ஆட்சி கவிழ்கிறதா.. பின்னணி என்ன?
நேபாளத்தில் ஆளும் கூட்டணிக் கட்சியில் உள்ள பிரதான கட்சியான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி விலகி இருப்பது அங்கு பிரசாந்தா தலைமையிலான அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
காத்மாண்டு: நேபாள பிரதமர் பிரசாந்தா தலைமையிலான அரசுக்கு அளித்த ஆதரவை திரும்பப்பெறுவதாக கே.பி. சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இதனால் ஆளும் கூட்டணிக் கட்சியில் உள்ள பிரதான கட்சியான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி விலகி இருப்பது அங்கு பிரசாந்தா தலைமையிலான அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று நேபாளம். இமய மலை அடிவாரத்தில் இயற்கை சூழல் நிறைந்த பகுதியில் அமைந்திருக்கும் இந்த நாட்டில் அரசியல் பரபரப்புகளுக்கு சற்றும் பஞ்சம் கிடையாது.
நேபாளத்தை பொறுத்தவரை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியான நேபாளி காங்கிரஸ் 87 இடங்களில் வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 275 இடங்களில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

நேபாளத்தின் பிரதமராக..
இதனால், புதிய அரசு அமைதில் கடும் இழுபறி ஏற்பட்டது. ஒருவழியாக சிபிஎன் மாவோயிஸ்ட் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான புஷ்ப கமல் தஹல் என்ற பிரசாந்தா முன்னாள் பிரதமர் கேபி சர்மா ஒலியின் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட 4 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தார். இதன்படி, கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் நேபாளத்தின் பிரதமராக பிரசாந்தா பதவியேற்றுக்கொண்டார்.

நேபாளத்தில் அதிபர் தேர்தல்
நேபாள பிரதமராக பிரசந்தா பதவியேற்றுக்கொண்டது இது முதல் முறையாக இருந்தது. இந்த ஆட்சி அமைந்து இரு மாதங்களே ஆகியுள்ள நிலையில், அங்கு மீண்டும் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வரும் மார்ச் 9 ஆம் தேதி நேபாளத்தில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த அதிபர் தேர்தலில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கேபி சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுபாஷ் நெம்பாங்கு போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணிக்குள் குழப்பம்
எதிர்க்கட்சியான நேபாள காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராம் சந்திர பவுடல் போட்டியிடுகிறார். ராம் சந்திர பவுடலுக்கு ஆளும் சிபிஎன் மாவோயிஸ்ட் கட்சி உள்பட 8 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால், அதிபர் தேர்தலில் ராம் சந்திர பவுடல் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. தேவேளையில் ஆளும் கூட்டணியில் இருக்கும் கேபி சர்மா ஒலியின் அதிபர் வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்காமல் எதிர்க்கட்சி வேட்பாளருக்கு பிரதமர் பிரசந்தாவின் சிபிஎன் மாவோயிஸ்டு கட்சி ஆதரவு கொடுத்தது கூட்டணிக்குள் குழப்பத்திற்கு வித்திட்டுள்ளது.

அரசு கவிழும் அபாயம்
இதன் தொடர்ச்சியாக பிரசாந்தா தலைமையிலான அரசுக்கு அளித்த ஆதரவை திரும்பப்பெறுவதாக கே.பி. சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. ஆளும் கூட்டணிக்கட்சியில் உள்ள பிரதான கட்சியான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி விலகி இருப்பது அங்கு பிரசாந்தா தலைமையிலான அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications