யூடியூபரை விடாத பாஜக.. துருவ் ரதீக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன்! இவர் யார் தெரியுதா?
டெல்லி: லோக்சபா தேர்தல் சமயத்தில் மத்திய பாஜகவையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து விவாதத்துக்கு உள்ளான பிரபல யூடியூபர் துருவ் ரதீக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் வழங்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. பாஜகவின் செய்தி தொடர்பாளர் தொடர்ந்து வழக்கில் துருவ் ரதீக்கு இந்த சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது யூடியூப்பில் அரசியல் சார்ந்த கருத்துகளை பலரும் பேசி வருகின்றனர். இதில் பலரும் தங்களுக்கு பிடித்த கட்சிகளுக்கு ஆதரவாகவும், பிடிக்காத கட்சிகளை விமர்சனம் செய்தும் வீடியோ வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் பிரபலமான யூடியூபராக அறியப்படுபவர் துருவ் ரதீ.

இவர் வெளிநாட்டில் இருந்து கொண்டு இந்திய அரசியல் சார்ந்த கருத்துகளையும், இந்திய தலைவர்கள் தொடர்பான விவகாரங்களை பேசி வீடியோ வெளியிட்டு வருகிறார். இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரை யூடியூப்பில் 2 கோடி பேர் பாலோ செய்கின்றனர்.
இந்நிலையில் தான் கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி துருவ் ரதீ வெளியிட்ட வீடியோ பாஜகவினரை கொந்தளிக்க செய்தது. அதாவது "Is India becoming a DICTATORSHIP?" என்ற பெயரில் அவர் வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் சண்டிகர் மேயர் தேர்தல், விவசாயிகள் போராட்டம் 2.0 பற்றி பேசியிருந்தார். அதோடு அவரது கருத்துகள் மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவை குற்றம்சாட்டும் வகையில் இருந்தது. இதனால் பாஜகவினர் கொந்தளித்தனர்.
அதன்பிறகு ஏப்ரல் 1ம் தேதி "DICTATORSHIP confirmed?" என்ற பெயரில் அவர் வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் தேர்தல் பத்திரங்கள், ஜார்க்கண்ட், டெல்லி முதல்வர்கள் கைது, வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் எனப் பல பிரச்சினைகள் இருப்பதாகப் பேசியிருந்தார். இது பாஜகவினரை மேலும் கோப்படுத்தியது.
இந்த வீடியோக்கள் எல்லாம் லோக்சபா தேர்தல் சமயத்தில் வெளியானதால் பாஜகவினர் துருவ் ரதீயை கடுமையாக விமர்சிக்க தொடங்கினர். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த பாஜகவின் செய்தி தொடர்பாளர் கரம்ஷி நக்வா சார்பில் டெல்லி நீதிமன்றத்தில் துருவ் ரதீக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
அதாவது துருவ் ரதீ "My Reply to Godi Youtubers" என்று பதிவு செய்த வீடியோ மூலம் அவதூறு பரப்பியதாக இந்த வழக்கு என்பது தொடரப்பட்டது. இந்த வீடியோவில் தன்னை பற்றி மிகவும் கொடூரமான அதேவேளையில் ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்டு ட்ரோல் செய்ததாக கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை நீதிபதி குஞ்சன் குப்தா விசாரித்தார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம் துருவ் ரதீக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications