தபால் வாக்கு.. முதியோர் வாக்களிப்பதற்கான வயது வரம்பு 85 ஆக உயர்வு.. மத்திய அரசு விளக்கம்
டெல்லி: தபால் வாக்கு மூலம் முதியோர் வாக்களிப்பதற்கான வயது வரம்பு 85 ஆக உயர்ந்துள்ளது. 80 வயதானவர்கள் தபால் வாக்கு மூலம் வாக்களிக்க கடந்த தேர்தலில் அனுமதி அளிக்கப்பட்டது.
தேர்தல் நேரத்தில் வயதானவர்கள் வரிசையில் நின்று வாக்களிப்பது இயலாத காரியம் என்பதால் வாகனங்களில் வாக்குச்சாவடிகளுக்கு அழைத்து வருவார்கள். ஒரு சிலர் நடக்க முடியாத முதியவர்களை கைகளில் தூக்கி வந்து வாக்கு போட வைப்பது ஊடகங்களில் வெளியாகும்.

அரசு ஊழியர்கள், ராணுவ வீரர்கள், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தபால் வாக்கு செலுத்துவார்கள். இந்த சூழ்நிலையில்தான் கொரோனா காலத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தபால் மூலம் வாக்களிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை சில தரப்பினரால் முன்வைக்கப்பட்டது.
வாக்குச்சாவடிக்கு வர இயலாதவர்களுக்கு, குறிப்பாக உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு தபால் வாக்கு என்கிற வசதி அளிக்கப்படுகிறது. அதேநேரம் அவர்கள் தபால் வாக்கு அளிப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட மாட்டார்கள். இது சிறப்பு வசதி மட்டுமே. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும். தபால் வாக்கு நடைமுறை வெளிப்படையாக இருக்கும். வாக்காளர்கள் ரகசியம் காக்கப்படும். அரசியல் கட்சிகளும் முகவர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என்று தேர்தல் ஆணையம் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது விளக்கம் அளித்தது.
விரிவுபடுத்தப்பட்ட தபால் வாக்குமுறையை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று அப்போது திமுக உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையால் 15 சதவிகித அளவுக்கு முறைகேடு நடக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, சுற்றறிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று திமுகவினர் வலியுறுத்தினர்.
இந்த நிலையில் தபால் வாக்கு மூலம் முதியோர் வாக்களிப்பதற்கான வயது வரம்பு 85 ஆக உயர்ந்துள்ளது. 80 வயதானவர்கள் தபால் வாக்கு மூலம் வாக்களிக்க கடந்த தேர்தலில் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் முதியோருக்கான வயது வரம்பை உயர்த்தி மத்திய அரசின் சட்ட அமைச்சகம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்துடன் ஆலோசனை நடத்திய பின் வயது வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications