அந்த வார்த்தை தான் முக்கியமே! பிரதமர் மோடியை சந்தித்த பிரக்ஞானந்தா! நெகிழ்ச்சியாக கூறியதை பாருங்க!
டெல்லி: தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா தனது பெற்றோருடன் இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடி கொடுத்த ஊக்கத்தால் பிரக்ஞானந்தா நெகிழ்ந்து போனார்.
தமிழகத்தை சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா. சென்னையில் வசித்து வருகிறார். இவரது தந்தை பெயர் ரமேஷ் பாபு. தாய் நாகலட்சுமி. செஸ் விளையாட்டில் திறம்வாய்ந்தவராக வலம்வரும் பிரக்ஞானந்தா இந்தியாவின் கிராண்ட் மாஸ்டராக உள்ளார். தற்போது பல்வேறு போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.

பிரக்ஞானந்தாவுக்கு அவரது குடும்பத்தினர் உறுதுணையாக இருந்து வருகின்றனர். குறிப்பாக அவரது தாய் நாகலட்சுமி பக்கபலமாக இருக்கிறார். இந்நிலையில் தான் அஜர்பைஜான் தலைநகர் பாகு நகரில் கடந்த வாரம் உலக கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.
இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரக்ஞானந்தா இறுதி போட்டிக்கு முன்னேறினார். இறுதி போட்டியில் அவர் நார்வே நாட்டை சேர்ந்த உலக செஸ் வீரர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் மேக்னஸ் கார்ல்செனை எதிர்கொண்டு தோல்வியடைந்தார். இதன்மூலம் பிரக்ஞானந்தா 2ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இருப்பினும் பிரக்ஞானந்தாவின் இந்த வெற்றியை ஒட்டுமொத்த இந்தியாவும் கொண்டாடி வருகிறது.

இந்நிலையில் தான் வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பி உள்ள பிரக்ஞானந்தாவுக்கு நேற்று சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் உலக கோப்பை போட்டியில் வென்ற வெள்ளி பதக்கத்தை முதல்வர் ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். மேலும் பிரக்ஞானந்தாவுக்கு ரூ.30 லட்சத்தை பரிசாக முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இதன் தொடர்ச்சியாக இன்று பிரக்ஞானந்த் தனது பெற்றோருடன் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். டெல்லியில் பிரதமர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. பிரதமர் மோடியிடம் வெள்ளி பதக்கத்தை பிரக்ஞானந்தா காண்பித்தார். பிரதமர் மோடியும், பிரக்ஞானந்தாவும் எதிரெதிர் இருக்கைகளில் அமர்ந்து இருக்க நடுவே செஸ் போர்ட் வைக்கப்பட்டு இருந்தது.

இந்த வேளையில் பிரதமர் மோடி, பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதோடு பிரக்ஞானந்தா மற்றும் அவரது குடும்பத்தினரை ஊக்கப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி பேசினார். அதன்பிறகு பிரக்ஞானந்தா தனது பெற்றோருடன் பிரதமர் மோடியுடன் சேர்ந்து போட்டோ எடுத்து கொண்டார்.
இந்நிலையில் தான் பிரக்ஞானந்தாவின் சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛இன்று இரவு 7 மணிக்கு மிகவும் சிறப்பான பார்வையாளர்கள் என்னை சந்தித்தனர். இந்திய இளைஞர்களுக்கு உதாரணமாக திகழும் பிரக்ஞானந்தாவின் ஆர்வமும், விடாமுயற்சியும் இந்தியாவின் இளைஞர்கள் எந்த களத்தையும் எப்படி கைப்பற்ற முடியும் என்பதை காட்டுகிறது. உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன்'' என தெரிவித்துள்ளார்.
அதேபோல் பிரதமர் மோடி உடனான சந்திப்பு குறித்து பிரக்ஞானந்தா தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது மிகவும் பெருமையான தருணமாக உள்ளது. என்னையும் என் பெற்றோரையும் ஊக்கப்படுத்தியதற்கு நன்றி சார்'' என தெரிவித்துள்ளார். இன்னொரு பதிவில், ‛‛பிரதமர் மோடியுடனான கலந்துரையாடல் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications