தமிழ்நாடு நீட் விலக்கு மசோதா..உள்துறை அமைச்சகத்தில் பரீசிலனை.. குடியரசுத் தலைவர் விளக்கம்
தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி, ஆளுநர் மூலம் அனுப்பிய நீட் விலக்கு மசோதா உள்துறை அமைச்சகத்தின் பரீசிலனைக்காக அனுப்பப்பட்டுள்ளது குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விளக்கம்.
டெல்லி: நீட் விலக்கு மசோதா மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது என்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு விளக்கம் அளித்துள்ளார்.
நாடு முழுவதும் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவக் கல்வியில் சேர்வதற்கு பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வை மத்திய அரசு கொண்டுவந்தது. தமிழ்நாட்டில் 2017-ம் ஆண்டு முதல் நீட் தேர்வு நடைமுறையில் இருந்துவருகிறது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்து குரல் எழுப்பி வருகின்றன.

நீட் தேர்வுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்திய மாணவி அனிதாவின் மறைவுக்கு பிறகு நீட் தேர்வுக்கு எதிரானப் போராட்டம் தமிழகத்தில் உச்சத்தை எட்டியது. அனைத்து அரசியல் கட்சிகளும் நீட் தேர்வு எதிர்ப்பு கோரிக்கையை முன் வைத்து வருகின்றன. நீட் தேர்வை ரத்து செய்வது என்ற ரகசியம் தங்களுக்கு மட்டுமே தெரியும் என்று கூறினார் உதயநிதி ஸ்டாலின்.
கடந்த 2019ஆம் ஆண்டு அதிமுக அரசு நீட் தேர்வுக்கு எதிராகச் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. ஆனால், குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்காமல் மசோதா ரத்து செய்யப்பட்டது. அதனையடுத்து, மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்றப் பிறகு கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நீட் விலக்கு மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பபட்ட நீட் மசோதா நீண்ட தாமதத்துக்குப் பிறகு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்ட்டது. ஆனால், தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் இதுவரை ஒப்புதல் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் குடியரசுத்தலைவருக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். அரியலூர் மருத்துவ கல்லூரி அரங்கத்திற்கு அனிதாவின் பெயர் சூட்டி இன்று தமிழ்நாடு முதல்வர் அறிவித்துள்ளார்.
மருத்துவ அரங்கும், மருத்துவக்கல்வியும் அனித்தாக்களுக்கானது. அதை பறிப்பதை தடுக்கும் நீட் ஒழிப்பு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.
நீட் மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை வழங்குவதற்கான பல்வேறு உண்மைகள் மற்றும் அரசியலமைப்பு விதிகளை விரிவாக விளக்கும் வகையில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலைக் கோரும் குறிப்பாணைக்கு உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன்.
செப்டம்பர் 2021-ல் மாநில சட்டசபையில் மேற்படி மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு 15 மாதங்களுக்கும் மேலாகிறது. மேற்படி மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவதில் தாமதம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பெரும் மன அழுத்தத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது என்று சு.வெங்கடேசன் எம்.பி கடித்ததில் கூறியுள்ளார்.
இந்நிலையில் சு.வெங்கடேசன் எம்.பி எழுதிய கடிதத்திற்கு குடியரசு தலைவர் பதில் அளித்துள்ளார். நீட் விலக்கு மசோதா உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது என்று குடியரசு தலைவர் பதில் அளித்துள்ளார். 19.01.2023 தேதியிட்ட இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் ரசீதை ஒப்புக்கொள்ள எழுதுகிறேன். உரிய கவனத்திற்கு உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், அரியலூர் மருத்துவ கல்லூரி அரங்கத்திற்கு அனிதாவின் பெயர் சூட்டி இன்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். மருத்துவ அரங்கும், மருத்துவக்கல்வியும் அனித்தாக்களுக்கானது. அதை பறிப்பதை தடுக்கும் நீட் ஒழிப்பு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். தமிழகத்தின் கனவு அனித்தாக்களின் கல்வி உரிமையை நிலைநாட்டுவதே என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications