இனிப்பு கலந்த தயிர்.. நிர்மலா சீதாராமனுக்கு ஊட்டிவிட்ட ஜனாதிபதி.. பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு சுவாரசியம்
டெல்லி: 2025-26ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். முன்னதாக நிர்மலா சீதாராமன், ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரெளபதி முர்முவை சந்தித்தார். அப்போது திரெளபதி முர்மு, நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பு கலந்து தயிரை ஊட்டினார். இதன் பின்னணியில் சுவாரசிய விஷயம் உள்ளது.
2025-26ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். மொத்தம் 1 மணிநேரம் 15 நிமிடங்கள் வரை அவர் பட்ஜெட் உரை நிகழ்த்தினார்.
காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் உரையை நிர்மலா சீதாராமன் படிக்க தொடங்கினார். இந்த பட்ஜெட் உரையை அவர் மதியம் 12.15 மணிக்கு முடித்தார். இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 8 வது பட்ஜெட்டாகும்.

மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக ஒவ்வொரு ஆண்டும் மத்திய நிதி அமைச்சர்கள் ஜனாதிபதியை சந்திப்பது வழக்கம். அந்த வகையில் இன்று காலையில் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் இருந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காரில் புறப்பட்டு ஜனாதிபதி மாளிகைக்கு சென்றார்.
ஜனாதிபதி மாளிகை சென்ற நிர்மலா சீதாராமன் மற்றும் அவரது துறை சார்ந்த அதிகாரிகளுக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதன்பிறகு நிர்மலா சீதாராமன் உள்பட நிதித்துறை அதிகாரிகள் ஜனாதிபதி திரெளபதி முர்முவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பு(சர்க்கரை) கலந்த தயிரை ஜனாதிபதி திரெளபதி முர்மு ஊட்டி விட்டார்.
இது ஒரு வழக்கமான சம்பிரதாயமாகும். பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு மத்திய நிதி அமைச்சருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இந்த நடைமுறை காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக தன்னை சந்திக்க வந்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, ஜனாதிபதி திரெளபதி முர்மு இனிப்பு கலந்த தயிர் ஊட்டி விட்டார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications