நமக்கு பிரச்சனையில்ல.. மோடியால்தான் விலைவாசி கட்டுக்குள் இருக்கு! இலங்கையுடன் ஒப்பிட்ட அமித்ஷா
டெல்லி: இலங்கை, பாகிஸ்தான் உள்பட பிற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார மந்த நிலை கட்டுக்குள் உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
இந்தியாவில் பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்து வருவதாகவும், தொடர்ந்து விலைவாசி உயர்ந்து வருவதாகவும் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்பட ஏராளமான எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மத்திய அரசை விமர்சனம் செய்து வருகின்றன.

எதிர்க்கட்சிகளின் தொடர் விமர்சனம்
குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் உள்ளிட்டவர்கள் ஜிஎஸ்டி வரி விதிப்பு, பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஜிஎஸ்டி வரி விதிப்பை கொள்ளை செயலுடன் ஒப்பிடும்வகையில் ராகுல்காந்தி கப்பர்சிங் வரி என விமர்சனம் செய்துள்ளார்.

அமித்ஷா பேச்சு
ஆனால் இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகால கொரோனா பரவல் காரணமாக உலக பொருளாதாரம் மோசமான நிலையிலும் கூட இந்தியாவின் பொருளாதார நிலைமை சரியான பாதையில் பயணிக்கிறது என மத்திய அரசு கூறி வருகிறது. இந்நிலையில் தான் டெல்லியில் 6வது தேசிய சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பேசினார். அப்போது அவர் இந்திய பொருளாதாரம், விலைவாசி உயர்வு பற்றிய முக்கிய கருத்துகளை கூறினார். இதுபற்றி அமித்ஷா பேசியதாவது:

கட்டுப்பாட்டில் விலைவாசி உயர்வு
பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளால் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் விலைவாசி உயர்வு, பொருளாதார மந்தநிலை என்பது கட்டுப்பாட்டில் உள்ளது. நாம் இலங்கை, பாகிஸ்தான் உள்பட அண்டை நாடுகள் மற்றும் அமெரிக்காவின் நிலையை பார்த்து வருகிறோம். இந்த நாடுகளை ஒப்பிடும்போது இந்தியா நல்ல நிலையில் உள்ளது. தற்போதைய சூழலில் உலகில் வேகமாக பொருளாதார வளர்ச்சி உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கிறது.

ஜிஎஸ்டி வரி சூழல் ரூ.1.62 லட்சம் கோடி
இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) ‛கப்பர் சிங் வரி' என குறிப்பிடும் நபருக்கு (மறைமுகமாக ராகுல்காந்தி) ஒன்று தெரியாது. இன்றைய நிலவரப்படி ஜிஎஸ்டி வசூல் 1.62 லட்சம் கோடியை தாண்டியுள்ளது என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். நிலக்கரி இறக்குமதியை குறைக்க 50 சதவீத நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடுவதற்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. இந்த ஒதுக்கீடுகளில் இதற்கு முன்பு ஊழல் நடந்தன. கனிமங்கள் என்பவை நாட்டின் வளங்கள். இதனை நாட்டின் வளர்ச்சிக்காக மட்டுமே ஏலம் விடப்படும்'' என்றார்.












Click it and Unblock the Notifications