#CHEER4INDIA -நாட்டின் கவுரவம் காக்க ஒலிம்பிக் சென்றுள்ள வீரர்களை உற்சாகப்படுத்துங்கள்.. மோடி பேச்சு
டெல்லி: மன் கி பாத் உரையில் தடகள வீரர் மில்கா சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, #CHEER4INDIA ஹேஷ்டேக்கை பயன்படுத்தி இந்திய ஒலிம்பிக் வீரர்களை உற்சாகப்படுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலி மூலம் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசி வருகிறார். அதன்படி இன்றும் அவர் மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
வரும் ஜூலை மாதம் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி அது குறித்தும் இன்றைய நிகழ்ச்சியில் பேசினார்.

மில்கா சிங்
பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களிடம் ஒலிம்பிக் தொடர்பான பொது அறிவு கேள்வி கேட்டு தனது உரையைத் தொடங்கினார். மேலும், சமீபத்தில் கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பால் மறைந்த மில்கா சிங்கிற்கு இரங்கலையும் பிரதமர் மோடி தெரிவித்தார். மில்கா சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரிடம் பேசியதாகவும் அப்போது ஒலிம்பிக் வீரர்களை உற்சாகப்படுத்துமாறு அவரிடம் கேட்டுக் கொண்டதாகவும் குறிப்பிட்டார்.

ஒலிம்பிக் போட்டிகள்
தேசத்தின் கவுரவத்தைக் காப்பாற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவிருக்கும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த வில் வித்தை வீரர் பிரவீன் ஜாதவ்வின் கடின உழைப்பைக் குறிப்பிட்ட பேசிய பிரதமர் மோடி, அவரை போன்ற வீரர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

#CHEER4INDIA ஹேஷ்டேக்
#CHEER4INDIA ஹேஷ்டேக்கை பயன்படுத்தி இந்திய ஒலிம்பிக் வீரர்களை உற்சாகப்படுத்துமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். முன்னதாக கடந்த ஜூன் 24ஆம் தேதி தான் #CHEER4INDIA என்ற ஹேஷ்டேக்கை மத்திய விளையாட்டுத் துறை அறிமுகப்படுத்தியது. இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி ஒலிம்பிக் போட்டிகள் கலந்து கொள்ளும் வீரர்களை உற்சாகப்படுத்துமாறு விளையாட்டுத் துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டிருந்தது.

ஜப்பான் ஒலிம்பிக்
கடந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் 18 விளையாட்டுகளில் 107 வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications