திடீரென காலில் விழுந்த சிறுமி.. உடனே பிரதமர் மோடி தந்த ரியாக்சன் + கிப்ட்! பொங்கல் விழா சுவாரசியம்
டெல்லி: டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல் முருகன் வீட்டில் இன்று நடந்த பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் திடீரென அவரது காலில் விழுந்து சிறுமி ஆசீர்வாதம் வாங்கிய நிலையில் பிரதமர் மோடி உடனடியாக செய்த செயல் அனைவரையும் கவர்ந்தது.
பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் குடும்பத்தினருடன் கொண்டாட வெளியூர்களில் இருந்து மக்கள் படையெடுத்து செல்கின்றனர்.

மேலும் பொங்கலையொட்டி விளையாட்டு போட்டிகள், ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு உள்பட கலாசார, பாரம்பரிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் மத்திய இணையமைச்சரான எல் முருகன் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் ஆண்டுதோறும் பொங்கல் விழா கொண்டாடி வருகிறார். தமிழகத்தை சேர்ந்தவர் எல் முருகன். தமிழக பாஜக முன்னாள் தலைவரான இவர் ராஜ்யசபா எம்பியாக உள்ளார். அதோடு பிரதமர் மோடியின் அமைச்சரவையில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சராக செயல்பட்டு வருகிறார்.
அதன்படி இந்த ஆண்டும் மத்திய இணையமைச்சர் எல் முருகனின் தனது டெல்லி இல்லத்தில் இன்று பொங்கல் விழா கொண்டாட முடிவு செய்தார். இதற்கான ஏற்பாடுகளை அவர் செய்திருந்தார். விழாவுக்கு பிரதமர் மோடி உள்பட பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ஜார்க்கண்ட் ஆளுநர் ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
"ஒரே பாரதம் உன்னத பாரதம்" தேசிய உணர்வைப் பொங்கல் பண்டிகை பிரதிபலிக்கிறது: பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி தமிழர் பாரம்பரிய உடையான வேஷ்டி, அங்கவஸ்திரம் அணிந்து பானையில் பொங்கல் வைத்தார். முன்னதாக விழாவையொட்டி அவரது இல்லம் தோரணம் கட்டப்பட்டு இருந்தது மஞ்சள், கரும்பு, வாழைகள் கட்டப்பட்டு இருந்தது. தமிழர் கலாசார பாரம்பரிய நடனங்கள் நடந்தன. இதனை பிரதமர் மோடி கண்டு ரசித்தார்.
இந்த விழாவில் சிறுமி ஒருவர் பாடல் பாடினார். சத்யம், சிவம், சுந்தரம் என அவர் பாடிய பாடலை பிரதமர் மோடி ஆர்வமாக கேட்டார். இந்த பாடலில் மனம்கவர்ந்த பிரதமர் மோடி உடனடியாக கையை அசைத்து அந்த சிறுமியை அழைத்தார். அவர் மேடையில் இருந்து வேகமாக வந்து பிரதமர் மோடியின் காலை தொட்டு வணங்கினார். இதில் சிலிர்த்துப்போன பிரதமர் மோடி உடனடியாக தான் அணிந்திருந்த அங்கவஸ்திரத்தை எடுத்து சிறுமியின் கழுத்தில் அணிவித்து கையெடுத்து கும்பிட்டு பாராட்டினர். பதிலுக்கு சிறுமிக்கு பிரதமர் மோடியை கைக்கூப்பி வணங்கினார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி அனைவரையும் கவர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications