உத்தரகாண்ட் சுரங்க விபத்து: மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் டெலிபோனில் பேசிய பிரதமர் மோடி!
டெல்லி: உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் சிக்கி தவித்த 41 தொழிலாளர்களும் 17 நாட்கள் போராட்டத்திற்கு பின் நேற்று இரவு பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த நிலையில் மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி - யமுனோத்ரி இடையே சார்தாம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் சில்க்யாரா - தண்டல்கான் இடையே சுமார் 4.5 கி.மீட்டர் தொலைவுக்கு மலையை குடைந்து சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பணிகள் தொடங்கப்படட்து. இந்த சுரங்க பாதை அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், கடந்த 12 ஆம் தேதி அதிகாலை சுரங்கத்தின் முகப்பில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் பாறைகள் இடிந்து விழுந்து மூடிக்கொண்டன. இதனால், அப்போது சுரங்கத்திற்குள் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டனர். இதனால், தொழிலாளர்களை மீட்க முழு வீச்சில் மீட்புக்குழுவினர் இறங்கினர்.

முடிவுக்கு வந்த மீட்பு பணி: தேசிய பேரிடம் மீட்புக்குழு உள்பட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த மீட்புக்குழுவினர் இரவு பகல் பாராமல் மீட்பு பணியில் ஈடுபட்டனர். வெளிநாட்டில் இருந்து சுரங்க பணிகளில் நிபுணத்துவம் பெற்ற பணியாளர்கள் மீட்பு பணிக்கு வந்தனர். அதி நவீன தொழில்நுட்பம் கொண்ட இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. எனினும், இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக மீட்பு பணியில் அவ்வப்போது இடையூறு ஏற்பட்டது.
இன்னொரு பக்கம் தொழிலாளர்களுக்கு குழாய் மூலம் உணவு, ஆக்சிஜன் ஆகியவை அனுப்பி வைக்கபட்டது. ஆகர் இயந்திரம் பழுதடைந்ததால் கைகளால் மீட்கும் பணியும் நடைபெற்றது. எலி வளை தொழிலாளர்கள் எனப்படும் தொழிலாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 17 நாட்கள் நடைபெற்ற இந்த போராட்டம் நேற்று இரவு சுபமாக முடிந்தது.
தொலைபேசியில் பேசிய மோடி: தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்ட செய்தி அறிந்ததும் ஒட்டுமொத்த நாடும் நிம்மதி பெருமூச்சு விட்டது. மீட்பு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.
இந்த நிலையில், மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசியுள்ளர். தொழிலாளர்கள் அனைவரும் ஒரு அறையில் அமர வைக்கப்பட்டு அவர்களிடம் பிரதமர் மோடி பேசியுள்ளார். இந்த உரையாடலின் போது தொழிலாளர்களிடம் நலம் விசாரித்து இருக்கலாம் எனத்தெரிகிறது.












Click it and Unblock the Notifications