"அமலாக்க துறையை நான் மனதார பாராட்டுகிறேன்.." புகழ்ந்து தள்ளிய பிரதமர் நரேந்திர மோடி! என்ன மேட்டர்
டெல்லி: டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி அமலாக்கத் துறையின் செயல்பாடுகளைப் பாராட்டிப் பேசினார். எதிர்க்கட்சிகள் மட்டுமே அமலாக்கத் துறையைக் கண்டு அஞ்சுவதாகவும் அவர் தெரிவித்தார்.
நமது நாட்டில் இன்னும் சில வாரங்களில் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 7 கட்டங்களாகத் தேர்தல் நடக்கும் நிலையில், ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தேர்தலுக்கு சில காலம் மட்டுமே இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டன. இதற்கிடையே டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
பிரதமர் மோடி: இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி அமலாக்கத் துறை செயல்பாடுகளை வெகுவாக பாராட்டினார். ஊழலுக்கு எதிராக அமலாக்கத் துறை கடுமையான மற்றும் அசைக்க முடியாத நடவடிக்கைகளை எடுத்து வருவதாகப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். அதேநேரம் ஊழல் செய்த எதிர்க்கட்சிகள் அமலாக்கத் துறையின் நடவடிக்கைகளைப் பார்த்து அஞ்சுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அந்த ஆங்கில ஊடகம் நடத்திய மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, "ஊழலுக்கு எதிரான எந்தவொரு சலுகையையும் இந்த அரசு காட்டாது. இதுவே இந்த அரசின் முக்கிய அம்சமாகும். ஊழலுக்கு எதிராகச் செயல்பட எந்தவொரு விசாரணை நிறுவனத்திற்கும் முழுமையான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அமலாக்கத் துறை என்று இல்லை எந்தவொரு நிறுவனமும் ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுக்க முழு சுதந்திரத்தைக் கொடுத்துள்ளோம்.
நடவடிக்கை: 2014ஆம் ஆண்டுக்கு முன்பு அமலாக்கத் துறையைச் செயல்பட விடாமல் முடக்கிப் போட்டு இருந்தார்கள், அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ அரசில் குறைந்த எண்ணிக்கையில் வழக்குகள் மற்றும் குறைவான பறிமுதல்கள் இருப்பதே இதற்குச் சாட்சியாகும். அமலாக்க துறையை எடுத்துக் கொள்வோம். 2014 வரை பிஎல்எம்ஏ சட்டத்தின் கீழ் 1,800 வழக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன.
அதேநேரம் கடந்த 10 ஆண்டுகளில் 4,700 வழக்குகள் பதிவாகியுள்ளன. 2014 வரை ரூ.5,000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் அது அதிகரித்துள்ளது. ஒரு லட்சம் கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளன. வழக்கில் தண்டனை பெற்றுத் தருவதும் கூட 10 மடங்கு அதிகரித்துள்ளன.
1000 கோடி சொத்து: பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி, சைபர் கிரைம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றில் ஈடுபட்ட பல நபர்களை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது, மேலும் பெரிய அளவிலான குற்றங்களை முறியடித்துள்ளது. மொத்தம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்களைக் கைப்பற்றியுள்ளது.
வரலாறு காணாத வகையில் இப்படி ஊழலுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கும் போது சிலருக்கு இயல்பாகவே இதெல்லாம் பிடிக்காது. ஊழல் செய்தவர்களை இந்த விசாரணை அமைப்புகள் விடாது. இதன் காரணமாக நீங்கள் (எதிர்க்கட்சிகள்) இரவும் பகலும் மோடியை அசிங்கப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இந்த நாடு அவர்கள் பேச்சைக் கேட்பதில்லை.
தேர்தல் விரைவில் நெருங்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் பகல் கனவைக் காண்கிறார்கள். ஆனால், மோடி கனவுகளைத் தாண்டி உத்தரவாதம் அளித்து வருகிறார். இந்த முறை மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பது விரைவில் தெரியும். உங்கள் கனவுகளும் கரைந்துவிடும்" என்று அவர் விளாசினார்.












Click it and Unblock the Notifications