இந்தியா அமெரிக்கா வர்த்தகம்.. டிரம்ப்பிற்கு அவரது ஸ்டைலிலேயே பிரதமர் மோடி கொடுத்த பதில்! டிரெண்டிங்
டெல்லி: இந்தியா அமெரிக்கா இடையே கடந்த சில காலமாக மோதல் போக்கு நிலவி வந்தது. இதற்கிடையே திடீரென பிரதமர் மோடியுடன் பேச ஆவலாக இருப்பதாக டிரம்ப் கூறியிருந்த நிலையில், அதற்குப் பிரதமர் மோடி பதிலளித்துள்ளார். தானும் டிரம்ப்புடன் பேச ஆவலாக இருப்பதாகவும் இரு நாட்டு வர்த்தக பேச்சுவார்த்தை சீக்கிரம் முடியும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
இந்தியா அமெரிக்கா இடையே கடந்த சில மாதங்களாகவே வர்த்தக பதற்றம் நிலவி வருகிறது. ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்குவதாகச் சொல்லி இந்தியா மீது அமெரிக்கா 50% வரியை விதித்தது. இதனால் இரு நாட்டு உறவும் வர்த்தகமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்குப் போகும் சரக்குகள் 40% வரை குறையலாம் என அஞ்சப்படுகிறது.

அதிபர் டிரம்ப்
இந்தச் சூழலில் தான் அமெரிக்க அதிபர் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருந்தார். அதாவது இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருவதாகவும் நெருங்கிய நண்பரான பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசுவதற்கு ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், இரு நாடுகளுக்கும் ஏற்ற ஒரு ஒப்பந்தத்தைப் போடுவதில் எந்தவொரு சிக்கலும் இருக்காது என்று நம்புவதாகவும் அவர் பதிவிட்டிருந்தார்.
பிரதமர் மோடி பதில்
இந்தியா பற்றிக் கடந்த சில காலமாகவே கடுமையான கருத்துகளை அதிபர் டிரம்ப் கூறி வந்த நிலையில், திடீரென அவர் டோனை மாற்றியிருக்கிறார். இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்த டிரம்பின் இந்த ட்ரூத் சோஷியல் பதிவு கவனம் பெற்றது. இதற்கிடையே அதிபர் டிரம்பிற்கு அவரது ஸ்டைலிலேயே பிரதமர் மோடி பதிலளித்துள்ளார். இந்தியா மற்றும் அமெரிக்கா இயற்கையான கூட்டாளிகள் என்று கூறியுள்ள பிரதமர் மோடி, தானும் டிரம்ப் உடன் பேச ஆவலாக இருப்பதாகத் தெரிவித்தார்.
வர்த்தக பேச்சுவார்த்தை
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில் மேலும், "இந்தியா- அமெரிக்கா நாடுகளுக்கு இடையே நெருங்கிய நட்பு இருக்கிறது. இரு நாடுகளும் இயற்கையான கூட்டாளிகள். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் இந்தியா- அமெரிக்கா கூட்டணியின் முழு திறனை வெளிப்படுத்தும் என நம்புகிறேன்.. இந்தப் பேச்சுவார்த்தைகளை விரைவாக முடிக்க இரு தரப்பும் முயன்று வருகின்றன.
நானும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் பேச ஆவலாக இருக்கிறேன்.. இது இரு நாட்டு மக்களுக்கும் சிறந்த மற்றும் வளமான எதிர்காலத்தைத் தரும். இந்தப் பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று நம்புகிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
வரிக்குக் காரணம்
இந்தியா ரஷ்யக் கச்சா எண்ணெய்யை வாங்குவதால் உக்ரைன் போர் தொடர்வதாகச் சொல்லியே இந்தியா மீது டிரம்ப் 50% வரிகளை விதித்திருந்தார். ஆனால், உண்மையில் ரஷ்ய கச்சா எண்ணெய்யைத் தாண்டியும் சில காரணங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக வர்த்தக ஒப்பந்தத்தில் இரு தரப்பிற்கும் உடன்பாடு ஏற்படாததே 50% வரிக்குக் காரணம் எனச் சொல்லப்பட்டது.
பின்னணி
இந்தியாவில் உள்ள விவசாயம் மற்றும் பால் விவசாயம் துறைகளை அமெரிக்க நிறுவனங்களுக்குத் திறந்து விட வேண்டும் என்பதே அமெரிக்காவின் பிரதான கோரிக்கை. ஆனால், அப்படி அமெரிக்க நிறுவனங்களை அனுமதித்தால் அது இந்திய விவசாயிகளைக் கடுமையாக பாதிக்கும் என்பதாலேயே மத்திய அரசு இதில் தயக்கம் காட்டி வருகிறது. இந்த சூழலில் இரு தரப்பும் இது பற்றிப் பேசியுள்ளதால், வர்த்தக உடன்படிக்கை சீக்கிரம் எட்டப்படும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications