45 ஆண்டுகளுக்கு பிறகு போலந்து செல்லும் இந்திய பிரதமர்! மோடி பயணத்திற்கான காரணம் இதுதான்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அரசுதுறை பயணமாக இன்று போலந்து செல்கிறார். அங்கு, அந்நாட்டின் பிரதமர் மற்றும் அதிபரை சந்தித்து பேசும் மோடி, வர்சாவில் இந்திய வம்சாவளியினர் மற்றும் தொழிலதிபர்களை சந்தித்து உரையாடுகிறார். போலந்து-இந்தியா தூதரக உறவின் 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் மோடி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகளுடனான இந்தியாவின் உறவை பலப்படுத்தும் விதமாக போலந்து-இந்தியா உறவு அமைந்நதிருக்கிறது. கடந்த 2022ம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நேரத்தில், உக்ரைனிலிருந்த இந்திய மாணவர்களை மீட்க பெரிதும் உதவியது போலந்துதான். இது இந்தியா-போலந்து உறவின் பலத்தை எடுத்துக்காட்டியது. இந்த உறவை மேலும் பலப்படுத்தவும், ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தக உறவை வளர்த்துக்கொள்ளவும் இந்தியா போலந்துடன் தொடர்ந்து நெருக்கம் காட்டி வருகிறது.

இந்நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி, அரசுமுறை பயணமாக போலந்து செல்கிறார். சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்னர் 1979ல் அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் போலந்து சென்றிருந்தார். அதன் பின்னர் போலந்து செல்லும் முதல் பிரதமர் என்கிற பெருமையை இந்த பயணத்தின் மூலம் நரேந்திர மோடி பெறுகிறார். பிரதமரின் இந்த பயணத்தின்போது, புவிசார் அரசியல் பிரச்சினைகள், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தற்போதைய நிலவரப்பில் போலந்தில் 25,000 இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். இதில் 5000 பேர் மாணவர்கள். முதலீட்டை பொருத்தவரை, இந்தியாவின் ஐடி, மருந்துகள், பண்ணை வாகனங்கள், எலக்ட்ரானிக்ஸ், ஸ்டீல் மற்றும் ரசாயனங்கள் போன்ற துறை சார்ந்த நிறுவனங்கள் போலந்தில் முதலீடு செய்துள்ளன. மறுபுறம் சுகாதாரப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் உலோகங்கள் போன்ற துறை சார்ந்த சுமார் 30 போலந்து நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன.
இந்தியா-போலந்து இடையேயான தூதர உறவு தொடங்கி 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் இன்று பிரதமர் மோடியின் போலந்து பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அதேபோல போலந்து தொழில்முனைவோர் இந்தியாவுடன் வணிகத்தை வளர்த்துக் கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளனர். எனவே மோடியின் பயணம் இந்த முதலீடுகளை ஊக்குவிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. போலந்தை தொடர்ந்து பிரதமர் மோடி உக்ரைனுக்கும் செல்கிறார்.












Click it and Unblock the Notifications