விரைவில் சட்டசபை தேர்தல்! இன்று குஜராத் செல்லும் பிரதமர் மோடி!ரூ.3,050 கோடி திட்டத்துக்கு அடிக்கல்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது சொந்த மாநிலமாக குஜராத்துக்கு பயணம் செய்ய உள்ளார். இந்த ஆண்டு இறுதியில் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ரூ.3050 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி உரையாற்ற உள்ளார்.
குஜராத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் தான் குஜராத் சட்டசபையின் பதவிக்காலம் டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக முயன்று வருகிறது. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் உள்ளதோடு, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சியும் குஜராத் தேர்தலில் களம் காண உள்ளது.

டிசம்பரில் சட்டசபை தேர்தல்
இந்த ஆண்டு டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இதனால் பாஜக, காங்கிரஸ் என இருமுனை போட்டி நிலவிய குஜராத் மாநிலத்தில் வரும் சட்டசபை தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட உள்ளது. இதனால் சொந்த மாநிலமாக குஜராத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

குஜராத்தில் பிரதமர் மோடி
இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரூ3,050 கோடி திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டுகிறார். நவ்சாரியில் 'குஜராத் பெருமை இயக்கத்தின்'பலவகையான வளர்ச்சி திட்டங்களை அவர் துவக்கி வைக்கிறார். இதன்மூலம் 7 திட்டங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது. 12 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதோடு, 14 திட்டங்களுக்கு பூமிபூஜை மேற்கொள்ளப்பட உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி உரை
மேலும் நவ்சாரியில், எம் நாயக் சுகாதார கவனிப்பு வளாகம் மற்றும் நிராலி பன்னோக்கு மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து உரையாற்ற உள்ளார். அகமதாபாத்தில் உள்ள IN SPACe எனும் இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மைய தலைமையகத்தையும் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார். இந்த வேளையில் பயன்பாடு மற்றும் சேவைகள் அடிப்படையில், விண்வெளி துறையில் பணியாற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கும், இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மையத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், பரிமாற்றங்கள் நடைபெற உள்ளது.

பிரதமர் அலுவலக அறிக்கை
இதுதொடர்பாக, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 'பிரதமர் மோடி ஜூன் 10ல் குஜராத் செல்கிறார். நவ்சாரியில் நடைபெற உள்ள ‛‛குஜராத் கவுரவ் அபியான்' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, அகமதாபாத்தில் இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தின் தலைமையகத்தை திறந்து வைக்கிறார்'' என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications