பிரதமர் மோடி வீட்டுக்கு விரைந்த அமித் ஷா, ராஜ்நாத் சிங், அஜித் தோவல்.. அவசர ஆலோசனை! என்ன நடக்கிறது?
டெல்லி: ஜம்மு விமான நிலையம் அருகே ட்ரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடன் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
நேற்று முன்தினம் அதிகாலையில் ஜம்மு விமான நிலைய வளாகத்தில் உள்ள உயர் பாதுகாப்பு நிறைந்த விமானப்படை நிலைய தொழில்நுட்ப பகுதியில் ட்ரோன் மூலமாக வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. அதே நேரம் கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்தது. விமானப் படையைச் சேர்ந்த 2 வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் ஜம்மு விமான நிலையத்தில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் 5 கிலோ வெடி மருந்துடன் ஒரு தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வகையான வெடிமருந்துகள் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பினர் பயன்படுத்தக்கூடியது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சீன தயாரிப்பு ட்ரோன்
தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்டிருக்கும் ட்ரோன், சீன நாட்டில் தயாரிக்கப்பட்டது. உணவு பொருட்களை டெலிவரி செய்ய பயன்படுத்தக்கூடியது என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை என்.ஐ.ஏ பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் சதிச்செயல் இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் சதி
ஜம்மு காஷ்மீர் மாநில அரசியல் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி சில தினங்களுக்கு முன்பு ஆலோசனை மேற்கொண்டார். விரைவில் அங்கு தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில்தான் அமைதியை குலைக்கும் வகையில் பாகிஸ்தான் ஆதரவுடன் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

பாகிஸ்தான் மீது கோபம்
இது போன்ற பரபரப்பான சூழ்நிலையில் டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். பாகிஸ்தானுக்கு எதிராக அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது பற்றி இதில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது . மத்திய அரசு அடுத்ததாக எடுக்கக்கூடிய நடவடிக்கை குறித்து பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனவே இந்த ஆலோசனைக் கூட்டம் இந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சரவை விரிவாக்கம்
அதேநேரம், அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் ஜம்மு காஷ்மீர் அரசியல் நிலவரம் குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டு வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாளை அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ள நிலையில், இன்று சீனியர் அமைச்சர்களுடன் மோடி ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications