சுதந்திர இந்தியாவின் மறையா வடு! 1947 பிரிவினையை நினைவுகூர்ந்த பிரதமர் நரேந்திர மோடி
டெல்லி: நாடு முழுவதும் நாளை 78வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில், இன்று 1947 பிரிவினை குறித்து பிரதமர் மோடி நினைவுகூர்ந்திருக்கிறார். இந்த பிரிவினையின்போது துயரத்தை எதிர்கொண்ட மக்களின் துணிச்சலுக்கு அஞ்சலி செலுத்துவதாக மோடி கூறியுள்ளார்.
இந்தியா சுதந்திரமடைந்தது எவ்வளவு மகத்தான தருணமோ அதற்கு நேர் எதிரான தருணமாக அமைந்ததுதான் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை. இதன் காரணமாக சுமார் 1.5 கோடிக்கும் அதிகமான மக்கள் இரு நாடுகளிலிரும் இடம்பெயர்ந்தனர். இதில் பலர் காணாமல் போயினர், சிலர் காணாமல் ஆக்கப்பட்டனர். பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இவையெல்லாம் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்னரும் வடுவாக தொடர்ந்து வருகிறது.

'மனிதன் மகத்தான சல்லிப்பயல்' என்று தமிழின் மூத்த எழுத்தாளர் ஜி.நாகராஜன் குறிப்பிட்டிருப்பார். இந்த கூற்று 1947 பிரிவினைக்கு மிகக்கச்சிதமாக பொருந்துகிறது. இந்தியா-பாகிஸ்தான் என இரு நாடுகள் உருவாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டவுடன், இஸ்லாமியர்கள் எல்லோரும் பாகிஸ்தான் போக வேண்டும் என்று பேச்சு எழுந்தது. இது மதவெறியாக மாறி, இடம்பெயரும் இஸ்லாமிய மக்கள் மீதான தாக்குதலாக உருவானது. பதிலுக்கு இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த கோர தாக்குதலில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். ஒரு சிறு உதாரணத்தை சொல்ல வேண்டும் எனில், பஞ்சாப் மாநிலத்தில் சீக்கிய மதத்தை சேர்ந்த சிற்றூர் மக்கள் இடம்பெயர முயலும்போது கலவரக்காரர்களால் சூழப்பட்டனர். இதனால் தங்கள் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்பதை உணர்ந்த பெரியோர்கள், ஒன்று சேர்ந்து இளம்பெண்களை தற்கொலை செய்ய வலியுறுத்தினர்.
பெண்களும் வேறு வழியின்றி 80-90 என கூட்டமாக சேர்ந்து பாழும் கிணற்றில் விழுந்து மாண்டனர். கிணற்றில் சடங்கள் அதிகமானதால் அடுத்தடுத்து விழுந்தவர்கள் உயிர் பிழைத்துக்கொண்டனர். இப்படி பிரிவினையின் தழும்பு சுதந்திர இந்திய வரலாற்றில் இன்னும் மறையாமல் இருக்கிறது. இதனைத்தான் பிரதமர் மோடி நினைவு கூர்ந்திருக்கிறார்.
இது குறித்து டிவிட்டரில் அவர், “பிரிவினையால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை நினைவு கூர்கிறோம். துயரத்தை எதிர்கொண்ட மக்களின் துணிச்சலுக்கு அஞ்சலி செலுத்தும் நாள் இது” என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications