பிரதமரை சந்தித்த ரஷ்யா அமைச்சர்..நடுநிலை முடிவுக்கு வரவேற்பு..போரை நிறுத்த பிரதமர் மோடி வலியுறுத்தல்
டெல்லி : உக்ரைன் நாட்டில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுக்க வேண்டுமென சர்வதேச அழுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை சந்தித்து பேசிய போது, உக்ரைன் போரை நிறுத்த வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் உள்ள ஹைதராபத் பவனில் பிரதமர் நரேந்திர மோடியும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவும் சுமார் 40 நிமிடங்கள் சந்தித்து பேசினர்.
இங்கிலாந்து, சீனா, ஆஸ்திரியா, கிரீஸ் மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் உட்பட, கடந்த இரண்டு வாரங்களாக வருகை தந்துள்ள வெளிநாட்டு அமைச்சர்களை பிரதமர் நேரில் சந்திக்காத நிலையில் இச்சந்திப்பு முக்கியவத்துவம் வாய்ந்ததாக் கருதப்படுகிறது.

பிரதமர் மோடி சந்திப்பு
இந்த சந்திப்பு குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, பிரதமர் மோடி, உக்ரைனில் உள்ள நிலைமைகள், அமைதிப் பேச்சுவார்த்தைகள் பேசியதாகவும், உக்ரைன் நாட்டில் ரஷ்யாவின் வன்முறையை நிறுத்துமாறு அழைப்பு விடுத்தார் என கூறப்பட்டுள்ளது. "வன்முறையை முன்கூட்டியே நிறுத்துவதற்கான தனது அழைப்பை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார், மேலும் அமைதி முயற்சிகளுக்கு எந்த வகையிலும் பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது" என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர்
முன்னதாக, திரு லாவ்ரோவ், ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடமிருந்து பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட முறையில் ஒரு செய்தியை தெரிவிக்க விரும்புவதாகக் கூறினார். "ஜனாதிபதி புடினும் பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவரையொருவர் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர், எனது பேச்சுவார்த்தைகள் குறித்து ஜனாதிபதியிடம் ( புடின்) நான் தெரிவிப்பேன். அவர் பிரதமர் மோடிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறார், மேலும் இந்த செய்தியை வழங்குவதற்கான வாய்ப்பால் தனிப்பட்ட முறையில் நான் பெருமைப்படுகிறேன் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடனான பேச்சுவார்த்தையின் போது குறிப்பிட்டார்

எண்ணெய் இறக்குமதி
மாஸ்கோவிற்கு எதிரான அமெரிக்கத் தடைகளைத் தவிர்க்க முயற்சிக்கும் நாடுகளுக்கு கடும் விளைவுகள் ஏற்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ள நிலையில், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதிகள் தொடர்பாக இந்தியா மீதான கடுமையான அழுத்தத்தின் மத்தியில் ரஷ்ய அமைச்சரின் வருகை உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளது. இந்தியா அதிக அளவிலான தள்ளுபடியில் கச்சா எண்ணெய் வாங்கலாம் என்றும், இருதரப்பு வர்த்தகத்திற்காக ரூபிள்-ரூபாய் என புதிய முடிவில் இரு தரப்பினரும் ஆர்வமாக இருப்பதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்தியா நடுநிலை
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, அமெரிக்க துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலீப் சிங், மாஸ்கோவிற்கு எதிரான அமெரிக்க பொருளாதாரத் தடைகளை கடைபிடிக்காமல் இருக்கவும், தவிர்க்கவும் முயற்சிக்கும் நாடுகளுக்கு கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்த நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்காக இந்தியா இன்னும் வெளிப்படையாக விமர்சிக்கவில்லை மற்றும் ரஷ்யாவைக் கண்டிக்கும் தீர்மானங்கள் மீது ஐ.நா.வில் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. ஆனால் கடந்த வாரம், உக்ரேனில் மனிதாபிமான நெருக்கடி குறித்து ரஷ்யாவால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்கவில்லை, இது இந்தியாவின் நடுநிலை நிலைப்பாட்டை பிரதிபலிப்பதாகக் கருதப்படுகிறது.

ரஷ்யா பாராட்டு
இந்தியாவின் நிலைப்பாட்டையும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் பாராட்டினார். "இந்த நாட்களில் எங்கள் மேற்கத்திய சகாக்கள் எங்கள் மீது விதித்துள்ள நிலையில், சூழ்நிலையை ஒருதலைப்பட்சமாக கொள்ளாமல் நடுநிலையோடு இந்தியா இருப்பதை நாங்கள் பாராட்டுகிறோம்," என கூறினார். மேலும், உக்ரைன் விவகாரத்தில் பிரதமர் மோடி மத்தியஸ்தராக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவர், "இந்தியா ஒரு முக்கியமான நாடு, உக்ரைனின் பாதுகாப்புக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். .. மேற்குலகம் அதன் பொறுப்பை புறக்கணித்து விட்டது... இந்தியா அத்தகைய செயல்முறையை ஆதரிக்க முடியும்". என்றார்.












Click it and Unblock the Notifications