செங்கோட்டையில் பிரதமர் சிறப்புரை; பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்திய டெல்லி காவல்துறை
டெல்லி; நாட்டின் 75வது சுதந்திர தினம் நாளை மறுதினம் கொண்டாடப்படக்கூடிய நிலையில் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் சிறப்புரை ஆற்ற உள்ள நிலையில், இந்த பகுதியை சுற்றி 5 கி.மீ தொலைவிற்கு ராட்ச பலூன்கள், பட்டம் மற்றும் டிரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மேலும் வான்வழி தாக்குதல்களை தடுக்கும் விதமாக உயரமான இடங்களில் ராணுவ வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

கொண்டாட்டம்
நாடு முழுவதும் 75வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. மக்கள் இதனை சிறப்பாக கொண்டாட முதன் முறையாக தேசிய கொடி பயன்பாடுகள் குறித்த விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல முன்னதாக கைத்தறிகளில் உருவாக்கப்பட்ட தேசிய கொடிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என இருந்த விதியும் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல, தங்கள் வீடுகளில் அனைவரும் தேசிய கொடியை ஏற்றுங்கள் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

பாதுகாப்பு
கொண்டாட்டம் ஒருபுறம் இருந்தாலும் மறுபுறத்தில் பாதுகாப்பு அம்சங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி செயலில் ஈடுபடலாம் என்பதால், நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கு திசையில் பாகிஸ்தான் எல்லைப் பகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொள்ள 'ஆப்ரேஷன் அல்ர்ட்' என்ற நடவடிக்கையை எல்லைப் பாதுகாப்பு படை தொடங்கியுள்ளது. இந்த தீவிர கண்காணிப்பு பணி ஆகஸ்ட் 17-ம் தேதி வரை தொடரும்.

அலர்ட்
சட்டவிரோத அத்துமீறல், ட்ரோன் ஊடுருவல் என அனைத்தையும் மிக தீவிரமாக எல்லைப்பாதுகாப்புப் படையினர் கண்காணித்து வருகின்றனர். இந்த ஆப்ரேஷன் அலர்ட் நடவடிக்கை ராஜஸ்தான் மண்டல எல்லை பாதுகாப்பு படை ஐஜி டேவிட் லால்ரிசங்கா மேற்பார்வையில் நடைபெறுவதாக எல்லை பாதுகாப்பு படை டிஐஜிக்கள் அசீம் வியாஸ் மற்றும் ஆனந்த் சிங் தக் ஷக் ஆகியோர் தெரிவித்தனர். தற்போது இதனைத் தொடர்ந்து, டெல்லியின் செங்கோட்டையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

கண்காணிப்பு
நாளை மறுநாள் பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து சிறப்புரை ஆற்ற இருக்கிறார். இதையொட்டி செங்கோட்டையை சுற்றிலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை டெல்லி காவல்துறை செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக செங்கோட்டையில் இருந்து 5 கி.மீ. சுற்றளவில் பட்டம், டிரோன், ராட்ச பலூன் உள்ளிட்டவற்றை பறக்க விட ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பட்டம், டிரோன், ராட்ச பலூன் உள்ளிட்ட பறக்கும் பொருட்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்படுவதை தடுக்கும் வகையில் செங்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பதற்றம் நிறைந்த பகுதிகளில் உயரமான இடங்களில் ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications