காலக் கொடுமை! நபிகள் நாயகம் அவதூறு விவகாரத்தில் இந்தியாவுக்கு பாடம் எடுக்கும் 'சுள்ளான்' தலிபான்கள்
டெல்லி: இஸ்லாமியர்களின் இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்த பாஜகவினரின் அவதூறு விவகாரத்தில் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியிருக்கும் தலிபான்கள் இந்தியாவுக்கு மதவெறி தொடர்பாக பாடம் நடத்தும் நிலைமை உருவாகிவிட்டதாக மூத்த அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தொலைக்காட்சி விவாதம் மற்றும் சமூக வலைதளங்களில் பாஜகவின் மூத்த தலைவர்களான நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோ நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியும் பதிவிட்டும் வந்தனர். இது மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

கான்பூர் வன்முறை
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் பாஜக தலைவர்களின் இந்த பேச்சுக்கு எதிராக போராட்டம் மிகப் பெரும் வன்முறையாக வெடித்தது. கான்பூர் வன்முறையால் ஏற்பட்ட பதற்றம் இன்னனும் ஓயவில்லை.இந்த நிலையில் நபிகள் நாயகம் குறித்த அவதூறு விவகாரம் சர்வதேச பிரச்சனையாக விஸ்வரூபம் எடுத்தது.

சர்வதேசம் கண்டனம்
பாஜகவினரின் கருத்து என்பது உருமாறி நபிகள் நாயகம் குறித்த அவதூறு என்பது இந்தியாவின் கருத்தாகவும் சர்வதேச அளவில் மையம் கொண்டுவிட்டது. இதனால் பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன.ஈரான், ஈராக், குவைத், கத்தார், செளதி அரேபியா, ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜோர்டான், பாகிஸ்தான், பஹ்ரைன், மாலத்தீவுகள், லிபியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. இந்திய அரசு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இந்த நாடுகள் வலியுறுத்தி உள்ளன.
Recommended Video

கைது செய்ய வலியுறுத்தல்
இதனையடுத்து பாஜகவின் நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் இருவரும் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனாலும் இந்தியாவுக்கு அவமாவனத்தை உருவாக்கிவிட்ட இந்த இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று பெரும்பாலான தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் நுபுர் சர்மா மீது பல இடங்களில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது மத்திய பாஜக அரசுக்கு மிகப் பெரும் நெருக்கடியாக உருவெடுத்துள்ளன.

தலிபான்களும் அட்வைஸ்
இந்த விவகாரத்தில் மதவெறியுடன் ஆயுதம் தூக்கி வன்முறையால் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி இருக்கும் தாலிபான்கள் கூட இந்தியாவுக்கு பாடம் நடத்துவது என்பதுதான் சகிக்க முடியாததாக இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். தாலிபான்களின் செய்தித் தொடர்பாளரான Zabihullah Mujahid இது தொடர்பாக கூறுகையில், இத்தகைய மதவெறியை தூண்டும் வகையிலான பேச்சுகளை இந்திய அரசு அனுமதிக்கக் கூடாது; இஸ்லாமியர்களின் உணர்வுகளை வெறுப்பேற்றுகிற போக்கை நிறுத்த வேண்டும் என்றார். மேலும் நபிகள் நாயகம் குறித்த அவதூறுக்கு கடும் கன்டனத்தை தெரிவிக்கிறோம் என்றும் அவர் தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மத்தியில் ஆளும் பாஜகவினரின் வாய் துடுக்கால் இப்போது ஒட்டுமொத்த தேசமும் சுள்ளான் தாலிபான்களிடம்கூட கண்டனத்தை பெறும் நிலையில் இருப்பது வேதனைக்குரியது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications