பாஜகவில் இருந்தாலும் நல்லவிதமாக சொன்னீங்க! ரொம்ப பெருமையாக இருக்கு! குஷ்புவை பாராட்டிய சசீதரூர்
டெல்லி: பில்கிஸ் பானு கூட்டு பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக நடிகை குஷ்பு கருத்து தெரிவித்த நிலையில் அவரை காங்கிரஸ் கட்சியின் எம்பி சசீதரூர் பாராட்டியுள்ளார்.
கடந்த 2002ல் குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தது. அதன்பிறகு கலவரம் ஏற்பட்டது. இதில் ஏராளாமனவர்கள் இறந்தனர். இந்த கலவரத்தின்போது பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது குழந்தை உட்பட குடும்பத்தினர் 7 பேர் அந்த கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதுதொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேருக்கும் 2008 ம் ஆண்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் தான் நன்னடத்தை அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் குஜராத் மாநிலத்தில் விடுவிக்கப்பட்டனர்.

11 பேர் விடுதலை
சுதந்திர தினவிழாவையொட்டி நன்னடத்தை கைதிகள் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இந்த வேளையில் பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 14 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். சிறையில் இருந்து வெளியே வந்தவர்களுக்கு ஆரத்தி எடுத்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் 11 பேரின் விடுதலையை கடுமையாக விமர்சித்தனர்.

உயர்நீதிமன்றம் உத்தரவு
மேலும் 11 பேரின் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா, நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது . அப்போது நீதிபதி என்.வி.ரமணா பில்கிஸ் பானு வழக்கில் 11 பேரையும் விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிடவில்லை. இந்த வழக்கில் மத்திய அரசும், குஜராத் அரசும் உரிய பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணை 2 வாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குஷ்பு டுவிட்டர் பதிவு
இந்நிலையில் தான் பில்கிஸ் பானு விஷயத்தில் நடிகையும், அரசியல்வாதியுமான பாஜகவை சேர்ந்த குஷ்பு கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக கடந்த 25ம் தேதி அவர் வெளியிட்ட பதிவில், ‛‛ பாலியல் வல்லுறவால் ஆன்மா அச்சுறுத்தப்பட்ட ஒரு பெண்ணுக்கு கட்டாயம் நீதி கிடைக்க வேண்டும். இதில் தொடர்புடையவர்கள் யாரும் வெளியில் இருக்கக்கூடாது. அப்படி நடத்தால் அது மனிதகுலத்துக்கு பெண்ணினத்துக்குமான பெரும் அவமதிப்பாகும். பில்கிஸ் பானு மட்டுமல்ல எந்த பெண்ணாக இருந்தாலும் இந்த விவகாரத்தில் அரசியலுக்கு அப்பாற்றபட்டு உதவ வேண்டும்'' என கூறியுள்ளார்

குஷ்புவை பாராட்டிய சசீதரூர்
பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களை குஜராத் மாநிலத்தை ஆட்சி செய்யும் பாஜக அரசு தான் விடுதலை செய்தது. குஷ்பு தற்போது பாஜகவில் இருந்தாலும் கூட அதுபற்றி பேசி இருப்பதை பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் எம்பியுமான சசிதரூர் குஷ்புவை பாராட்டி உள்ளார். இதுதொடர்பாக சசிதரூர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛குஷ்பு சுந்தர் அவர்களே நீங்கள் வலதுசாரியின் பக்கம் நிற்காமல் சரியான விஷயத்திற்காக நிற்பதை கண்டு பெருமை கொள்கிறேன்'' என கூறியுள்ளார். அதாவது குஷ்பு பாஜகவில் செயல்பட்டு வந்தாலும் கூட வலதுசாரியாக இல்லாமல் சரியான கருத்தை தெரிவித்துள்ளதாக அவர் பாராட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications