பஞ்சாப் தேர்தல் தேதி மாற்றம்.. பிப்.20இல் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிப்பு.. இது தான் காரணம்
டெல்லி: பல்வேறு அரசியல் கட்சிகளிடம் இருந்து வந்த கோரிக்கைகளைத் தொடர்ந்து பஞ்சாப் சட்டசபைத் தேர்தலை பிப். 14இல் இருந்து பிப்.20க்கு ஒத்திவைப்பதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பும் சமீபத்தில் தான் வெளியிடப்பட்டுள்ளது.
வரும் பிப். 10ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு சில வாரங்கள் மட்டுமே உள்ளதால் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது..

5 மாநில தேர்தல்
இந்த 5 மாநிலங்களில் பஞ்சாப் மாநிலத்தில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. இதனால் எப்படியாவது ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது. மொத்தம் 117 சட்டசபை தொகுதிகள் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி வாக்குப்பதிவும் அதைத் தொடர்ந்து மார்ச் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் தேர்தல்
இந்நிலையில், வாக்குப்பதிவு நடைபெறும் பிப்ரவரி 14இல் இருந்து இரு நாட்களில், அதாவது பிப். 16இல் குரு ரவிதாஸின் பிறந்தநாள் வருகிறது. அவரை பின்பற்றும் லட்சக்கணக்கான மக்கள் அவருக்கு மரியாதை செலுத்தப் புனித யாத்திரையை மேற்கொள்வார்கள் என்பதால் அவர்கள் வாக்களிக்க முடியாத சூழல் ஏற்படும் என்றும் இதனால் வாக்குப்பதிவு நடைபெறும் நாளை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.

கோரிக்கை
பஞ்சாப் வாக்குப்பதிவை 5 நாட்கள் ஒத்தி வைக்க வேண்டும் என முதல்வர் சரண்ஜித் சிங் ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தார். அதேபோல பஞ்சாப் பாஜக பொதுச்செயலாளர் சுபாஷ் வர்மாவும் இது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில், குரு ரவிதாஸின் பிறந்தநாள் பிப்ரவரி 16இல் வருவதால் அவரை பின்பற்றுவோர், வாரணாசிக்குப் புனித யாத்திரை செல்வார்கள் என்பதால் வாக்குப்பதிவு நாளை ஒத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கும் இதைக் கோரிக்கையை வைத்திருந்தார்.

முக்கிய ஆலோசனை
பல்வேறு அரசியல் தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், பஞ்சாப் சட்டசபைத் தேர்தலை ஒத்திவைக்க முடியுமா என்பது குறித்துத் தேர்தல் கமிஷன் இன்று ஆலோசனை நடத்தியது. இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளிடம் இருந்து வந்த கோரிக்கைகளைத் தொடர்ந்து பஞ்சாப் சட்டசபைத் தேர்தலை பிப். 14இல் இருந்து பிப்.20க்கு ஒத்திவைப்பதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை திட்டமிட்டபடி மார்ச் 10இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications