சாமானிய மக்கள் மீது பாயும் சட்டம் அதானி மீது பாயாதா? உடனே கைது செய்யுங்க! ராகுல் காந்தி அட்டாக்
டெல்லி: அதானி மீது ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடி புகாரை அமெரிக்கா நீதிமன்றம் முன்வைத்திருக்கிறது. மட்டுமல்லாது அவருக்கு எதிரான பிடி வாரண்ட்டையும் பிறப்பித்துள்ளது. இப்படி இருக்கையில், ஏன் இன்னும் அதானி கைது செய்யப்படவில்லை? என்றும் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
சோலார் மின் சக்தி திட்டத்தை செயல்படுத்த ரூ.2000 கோடி அளவுக்கு லஞ்சம் கொடுக்க அதானி முன்வந்ததாக அவர் மீது அமெரிக்க பெடரல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ஏற்கெனவே பங்கு சந்தை வர்த்தகத்தில் ஊழல் செய்ததாக அவர் மீது ஹிண்டன்பர்க் எனப்படும் ஆய்வு நிறுவனம் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தது. இப்படி இருக்கையில், அமெரிக்காவின் குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளிடையே கடும் சலசலப்புகளை ஏற்படுத்தின.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், இதில் அதானி பிரச்னை குறித்து விவாதிக்க கோரிக்கையை எதிர்க்கட்சிகள் எழுப்பின. ஆனால் மத்திய அரசு இதற்கு மறுப்பு தெரிவித்தவிட்டது. இதனை தொடர்ந்து எழுந்த கூச்சல் குழப்பம் காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, அதானியை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அதாவது, "அவர் மீதான குற்றச்சாட்டுகளை அதானி ஒப்புக்கொள்வார் என்று நினைத்தீர்களா? நிச்சயமாக அவர் அதனை மறுத்துவிடுவார். ஆனால் அவரை கைது செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. இதனை நாங்கள் சமீப காலமாக வலுவாக வலியுறுத்தி வருகிறோம். சின்ன சின்ன குற்றங்களை செய்தவர்கள் நூற்றுக்கணக்கில் சிறையில் இருக்கின்றனர். இவர் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டிருக்கிறார்" என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
முன்னதாக அதானி குழுமம் செய்தி ஊடகங்களில் வெளியான தகவல்களை மறுத்திருந்தது. அதாவது கொளதம் அதானி, சாகர் அதானி மற்றும் வினீத் ஜன் உள்ளிட்டோர் மீது அமெரிக்க வெளிநாட்டு ஊழல் நடைமுறைகள் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதை நாங்கள் மறுக்கிறோம் என அதானி குழுமம் தெரிவித்துள்ளது. மட்டுமல்லாது, ஊடகங்களில் தங்கள் இயக்குநர்கள் பற்றி வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்றும் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications