ட்விஸ்ட்.. அனுமதி மறுத்த போலீஸ்.. 144 தடையை மீறி உண்ணாவிரதம்.. திமிறி எழும் காங்கிரஸ்! பரபர டெல்லி
டெல்லி: ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து இன்று டெல்லி ராஜ்காட் பகுதியில் காங்கிரஸ் கட்சி சங்கல்ப் சத்தியாகிரஹம் எனும் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்து இருந்தது. இந்நிலையில் தான் டெல்லி போலீசாருக்கு காங்கிரஸ் கட்சிக்கு இன்று அதிர்ச்சி வைத்தியம் அளித்த நிலையில் காங்கிரஸ் கட்சியினர் தடையை உடைத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2019ல் கர்நாடகா மாநிலம் கோலார் பிரசாரத்தில் மோடி பெயர் பற்றி ராகுல் காந்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ராகுல் காந்திக்கு எதிராக முன்னாள் அமைச்சரும், பாஜக எம்எல்ஏவுமான புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ராகுல் காந்திக்க 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவர் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. ராகுலை எதிர்கொள்ள முடியாத பாஜக இத்தகைய செயலை செய்துள்ளதாக காங்கிரஸ் மற்றும் அதன் தோழமை கட்சிகள் தெரிவித்துள்ளன.

உண்ணாவிரதம் அறிவிப்பு
இந்நிலையில் தான் ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி அறவழியில் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்தது. அதன்படி டெல்லியில் ராஜ்காட் பகுதியில் காங்கிரஸ் கட்சி சா்பில் சங்கல்ப் சத்தியாகிரஹம் எனும் பெயரில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அனுமதி மறுத்த போலீஸ்
மேலும் உண்ணாவிரத போராட்டம் நடத்த காங்கிரஸ் சார்பில் போலீசாரிடம் அனுமதி கோரப்பட்டது. இந்நிலையில் தான் உண்ணாவிரத போராட்டத்துக்கு டெல்லி போலீசார் இன்று திடீரென்று அனுமதி மறுத்துள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி போலீசார் அனுமதி வழங்கவில்லை.

144 தடை உத்தரவு
மேலும் உண்ணாவிரத போராட்டத்தையொட்டி இன்று காலையில் காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானவர்கள் ராஜ்காட் பகுதியில் குவிந்தனர். காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சிறிது நேரத்தில் அங்கு வருகை தர இருந்தனர். இதையடுத்து ராஜ்காட் பகுதியில் டெல்லி போலீசார் 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். இதன்மூலம் காங்கிரஸ் கட்சியின் உண்ணாவிரத போராட்டத்துக்கு தடை விழுந்தது.

தடையை மீறி உண்ணாவிரதம்
இருப்பினும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தடையை மீறி ராஜ்காட்டில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பொதுச்செயலாளர்களான பிரியங்கா காந்தி, கேசி வேணுகோபால் உள்பட பல தலைவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர். போராட்டத்தை கைவிடும்படி போலீசார் கூறிய நிலையில் அவர்கள் மறுப்பு தெரிவித்து அங்கு உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications