ராகுல் நேருவின் கொள்ளுப்பேரன்.. நான் காந்தியின் கொள்ளுப்பேரன்! தேச ஒற்றுமை யாத்திரையில் கமல்ஹாசன்!
டெல்லி : ராகுல் காந்தி நேருவின் கொள்ளுப்பேரன் எனவும் நான் காந்தியின் கொள்ளுப்பேரன் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நடத்திவரும் தேச ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் யாத்திரையில் பங்கேற்றவர்களிடையே உரையாற்றினார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்ரா' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொள்கிறார்.
கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து நடை பயணத்தை தொடங்கிய அவர், 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக மொத்தம் 48 நாட்கள் 3,700 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று காஷ்மீரை அடைகிறார்.

ராகுல் காந்தி
தமிழகம், கேரளா, கர்நாடக, மகராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை கடந்துள்ள ராகுலின் நடைபயணம் தற்போது 100 நாட்களைக் கடந்துள்ளது. இந்த பயணத்தில் லட்சக்கணக்கான மக்கள், காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்ட நிலையில் பல பிரபலங்களும் பங்கேற்றனர். தமிழகத்திலிருந்து பிரபலமானோர் ராகுலின் பேரணியில் கலந்து கொள்ளாத நிலையில், முதன்முறையாக காங்கிரஸ் கூட்டணியல்லாத கட்சியான மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கமல்ஹாசன் ராகுலின் நடைபயணத்தில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டது.

பாரத் ஜோடோ யாத்திரை
ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் இருந்து அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள், நட்சத்திர பட்டாளம் என ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் இணைந்த நிலையில் 108 வது நாளை அந்த யாத்திரையானது எட்டி இருக்கிறது. இந்நிலையில் இன்று அரியானா மாநிலத்தில் யாத்திரை நிறைவடைந்து தலைநகர் டெல்லியை அடைந்தது. அப்போது இந்த பேரணியில் ராகுல் காந்தியின் தாயார் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி, சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று காலை நடைபெற்ற பேரணியில் பங்கேற்றனர்.

கமல்ஹாசன்
இதை அடுத்து மாலையில் யாத்திரையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பங்கேற்றார். டெல்லியில் நடைபெற்ற யாத்திரையில் ராகுல் காந்தியுடன் கலந்து கொண்ட அவர் பின்னர் நடைபெற்ற பேரணியில் உரையாற்றினார். பேரணிக்கு பின்பு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய நடிகர் கமல்ஹாசன்," ராகுல் தன்னை தமிழர் என்று குறிப்பிட்டுள்ளார். அதனால் அவர் எனக்கு சகோதரர். பலரும் என்னை ஒற்றுமை இந்தியா நடைபயணத்தில் பங்கேற்க வேண்டாம் என வலியுறுத்தினர் .ராகுல் காந்தியுடன் பேரணியில் பங்கேற்றால் அரசியலில் பின்னடைவை சந்திக்க வேண்டும் எனக் கூறினர்.

நேருவின் கொள்ளுப்பேரன்
ஆனால் அதையெல்லாம் நான் கேட்டுக் கொள்ளாமல் இந்த பேரணியில் கலந்து கொண்டிருக்கிறேன். மாற்றுக் கொள்கையில் இருந்தாலும் தேசத்தின் ஒற்றுமை என்பதற்காக இந்த யாத்திரையில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். ராகுல் காந்தி நேருவின் கொள்ளுப்பேரன் நான் காந்தியின் கொள்ளுப்பேரன். நாங்கள் இருவரும் இந்தியாவை மீட்டெடுக்க இந்த பயணத்தில் பங்கு பெற்றிருக்கிறோம். மாற்றம் வரும் அதனை எதிர்நோக்கியே நாங்கள் பயணிக்கிறோம்" என பேசினார். இந்த பேரணியில் கமல்ஹாசனுடன் மநீம மாநில நிர்வாகிகள், டெல்லி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications