"மணிப்பூர் விவகாரம்.." பெல்ஜியம் பறந்த ராகுல் காந்தி.. ஐரோப்பிய எம்பிகள் உடன் ரகசிய ஆலோசனை.. பரபர
டெல்லி: காங்கிரஸின் ராகுல் காந்தி ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ள நிலையில், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடந்த மீட்டிங்கில் அவர் கலந்து கொண்டார்.காங்கிரஸின் ராகுல் காந்தி கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா சென்றிருந்தார். அங்கே அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருந்தார். அப்போது அவர் அங்கே பேசிய பல கருத்துகள் இங்கே சர்ச்சையை ஏற்படுத்தியது.
இங்குள்ள பாஜக தலைவர்கள் ராகுல் காந்தி வெளிநாட்டில் இருந்து கொண்டு நாட்டை அவமதிக்கும் வகையில் பேசுவதாகக் கடுமையாகச் சாடினார். இதற்கிடையே இப்போது மீண்டும் ராகுல் காந்தி வெளிநாட்டிற்குச் சென்றுள்ளார். இந்த முறை அவர் 3 ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றுள்ளார்.

மீட்டிங்: இதற்காக முதலில் அவர் ஐரோப்பாவில் உள்ள பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகருக்குச் சென்றார். அங்கு அவர் சில ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்துப் பேசினார். closed-door முறையில் நடந்த இந்த மீட்டிங்கில் ஊடகங்கள் அல்லது வெளியாட்கள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. மீட்டிங் முடிந்த பிறகு ராகுல் காந்தியுடன் அவர்கள் எடுத்துக் கொண்ட போட்டோ மட்டுமே இப்போது வெளியிடப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த சந்திப்பில் மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறை, மனித உரிமை பிரச்சினை குறித்து விவாதம் ஆலோசனை நடந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை மாதம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் மணிப்பூர் வன்முறை தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், ராகுல் காந்தியின் இந்தச் சந்திப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
என்ன விவாதம்: இந்த மீட்டிங் ஐரோப்பிய நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் பட்டியலிடப்படாத நிகழ்ச்சியாக இருந்துள்ளது. இந்த சந்திப்பு வெற்றிகரமாக இருந்ததாகக் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்தச் சந்திப்பில் மணிப்பூர் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியானாலும், துல்லியமாக எது குறித்து விவாதித்தனர். என்ன முடிவு எடுத்தனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. பிரஸ்ஸல்ஸ் நடந்த இந்த நிகழ்ச்சியை உறுதி செய்த காங்கிரஸ், இது குறித்த போட்டோவையும் பகிர்ந்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை மணிப்பூரில் அமைதியைக் கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வருவதாகவே மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. நீதித்துறை உட்பட அனைத்து தரப்பினரும் மணிப்பூரின் நிலைமையை நன்கு உணர்ந்துள்ளதாகவும் அங்கே அமைதியைக் கொண்டு வரவும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுத்து வருவதாகத் தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

காட்டம்: முன்னதாக மணிப்பூர் விவகாரம் குறித்துக் கடந்த ஜூலை மாதம் ஐரோப்பிய நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், அப்போது அது தொடர்பாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி சில காட்டமான கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அதாவது, ஐரோப்பிய நாடாளுமன்றம் தங்கள் உள்நாட்டுப் பிரச்சினைகளைச் சரி செய்யத் தனது நேரத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.
மேலும், இந்தியாவின் உள் விவகாரங்களில் இதுபோன்ற தலையீடுகளை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் இது காலனித்துவ மனநிலையையே பிரதிபலிக்கிறது என்றும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications