ராகுல் காந்தியின் அலுவலக போன், இண்டர்நெட் கனெக்ஷன் துண்டிப்பு.. அப்பீலுக்கு மத்தியிலும் நடவடிக்கை
டெல்லி: அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் குற்றம் நிரூபணம் செய்யப்படுவதாகவும் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாகவும் சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பினால், ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்ட நிலையில், தற்போது தீர்ப்புக்கு எதிராக ராகுல் காந்தி மேல் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை அடுத்த வாரம் நடைபெற உள்ள நிலையில், வயநாடு தொகுதியில் உள்ள ராகுல் காந்தியின் அலுவலக தொலைபேசி இணைப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி முன்வைத்த விமர்சனம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு எதிராக சூரத் குற்றவியல் நீதிமன்றத்தில் குஜராத் பாஜக எம்.எல்.ஏ புர்னேஷ் மோடி அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் கடந்த மாதம் தீர்ப்பளித்த சூரத் நீதிமன்றம், ராகுல் காந்தி குற்றவாளி என்று அறிவித்ததோடு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இரண்டு அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் மக்கள் பிரதிநித்துவ சட்டம் 1951- படி தண்டனை விதிக்கப்பட்ட எம்.பி அல்லது எம்.எல்.ஏவின் பதவி பறிக்கப்படும். அந்த வகையில், ராகுல் காந்தியின் எம்.பி பதவியும் பறிக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட அடுத்த சில நாட்களில் டெல்லியில் அவர் வசித்து வந்த அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என்றும் நோட்டீஸ் நாடாளுமன்ற வீட்டு வசதி குழு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸ்சுக்கு பதில் அளித்த ராகுல் காந்தி, விதிப்படி நடப்பதாகவும் கூறியிருந்தார். ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதால், அவர் 8 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. அவரது தண்டனைக்கு மேல் கோர்ட்டு தடை விதித்தால் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. இதற்கு அடுத்த சில நாட்களில் ராகுல் காந்தி தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்.

மேல் முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கு விசாரணை முடியும் வரை ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கினார். அதோடு, தண்டனை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு மனுதாரர் புர்னேஷ் மோடிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் மறு விசாரணையை வரும் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். இந்த நிலையில், வயநாடு தொகுதியில் இருந்த ராகுல் காந்தியின் அலுவலகத்திற்கு கொடுக்கப்பட்டு இருந்த தொலைபேசி மற்றும் இணைய இணைப்பை பி.எஸ்.என்.எல். துண்டித்துள்ளது. ராகுல் காந்தியின் அலுவலக தொலைபேசி இணைப்பு எண் 04936 209988- மற்றும் அதனுடன் கொடுக்கப்பட்டு இருந்த இணைய சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications