பாக். தாக்குதலால் பாதிக்கப்பட்ட காஷ்மீர் மக்களுக்கு நிவாரணம்! பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்
டெல்லி: பாகிஸ்தான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட காஷ்மீர் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத நிலைகள் மீது இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' என்கிற ராணுவ தாக்குதலை நடத்தியது. எல்லை தாண்டிய தாக்குதலால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் இந்தியா மீது பதில் தாக்குதலை தொடுத்தது.

குறிப்பாக எல்லை மாநிலமான ஜம்மு காஷ்மீரில் பீரங்கி குண்டுகளை கொண்டு தாக்குதலை நடத்தியது. இதில் பூஞ்ச் மாவட்டத்தில் பள்ளிகள், கடைகள், வீடுகள் சேதமடைந்தன. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, "பாகிஸ்தானின் இந்த திடீர் கண்மூடித்தனமான தாக்குதல் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நூற்றுக்கணக்கான வீடுகள், கடைகள், பள்ளிகள் மற்றும் மத வழிபாட்டு தலங்கள் சேதமடைந்திருக்கின்றன. சாமானிய மக்களின் ஆண்டுக்கணக்கான உழைப்பு ஒரே நொடி நாசமாக்கப்பட்டு இருக்கிறது.
பூஞ்ச் உட்பட பல எல்லை மாவட்டங்களில் மக்கள் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இன்று அவர்கள் பெரிய நெருக்கடியை சந்தித்திருக்கின்றனர். அவர்களின் வலியை புரிந்து கொண்டு அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப அனைத்து உதவிகளையும் வழங்குவது நமது கடமையாகும். பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பூஞ்ச் மற்றும் பிற பகுதிகளுக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும். உடைந்த வீடுகள், சிதைந்த வாழ்க்கை இவ்வளவு வலி இருப்பினும், அங்கிருந்து நாங்கள் இந்தியர்கள் என்கிற குரல் மட்டும் வலுவாக எழுந்திருக்கிறது.
எனவே மத்திய அரசுக்கு அதன் பொறுப்பை நான் நினைவூட்டுகிறேன். அரசு பாதிக்கப்பட்ட மக்களின் மறு வாழ்வுக்காக தாராளமாக நிவாரணம் வழங்க வேண்டும். இது உதவி அல்ல, கடமை" என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான் நடத்திய கொடூர தாக்குதலில் பூஞ்ச் பகுதியில் 28 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். 70 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications