இமாச்சல பிரதேசத்தின் 70 லட்சம் பேர் மகாராஷ்டிரா வாக்காளர் பட்டியலில் சேர்ப்பு- ராகுல் காந்தி திடுக்
டெல்லி: மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலின் போது வாக்காளர்கள் பட்டியலில், இமாச்சல பிரதேசத்தின் 70 லட்சம் வாக்காளர்கள் போலியாக சேர்க்கப்பட்டதாக நாடாளுமன்ற லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ராகுல் காந்தி பேசியதாவது: தேர்தல் ஆணையரை இந்த நாட்டின் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிதான் தேர்ந்தெடுத்து வந்தனர்; தற்போது தலைமை நீதிபதி இதில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதற்காக விதிகள் மாற்றப்பட்டுள்ளன. எதற்காக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இந்த குழுவில் இருந்து நீக்கப்பட்டார்? லோக்சபா தேர்தலுக்கு முன்னர் தேர்தல் ஆணையர் மாற்றப்பட்டு 2 புதிய ஆணையர்கள் நியமிக்கப்பட்டனர்; பின்னர் தேர்தல் தேதிகளும் மாற்றம் செய்யப்பட்டன என்பதை அனைவரும் அறிவோம்.

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் தொடர்பான சில தரவுகளை இந்த சபையில் முன்வைக்க விரும்புகிறேன். லோக்சபா தேர்தலில் மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டனி வெற்றி பெற்றிருந்தது. மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் சில மாதங்கள் கழித்து நடைபெற்றது. லோக்சபா தேர்தலை ஒப்பிடுகையில் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் புதியதாக 70 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருந்தனர். இமாச்சல பிரதேச மாநிலத்தின் மொத்த வாக்காளர்களையும் மகாராஷ்டிராவின் வாக்காளர் பட்டியலில் சேர்த்து மோசடி செய்துவிட்டனர்.
இந்த நாட்டின் தலித்துகள், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மக்கள் தொகை என்பது தெலுங்கானாவின் 90% மக்கள் தொகையாகும். இவர்களில் இதர பிற்படுத்தப்பட்டோர் மக்கல் தொகை 50%-க்கும் அதிகமாக இருக்கும். இந்த நாட்டின் மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், இதர பிற்படுத்தப்பட்டோர் வசம் இருந்திருந்தால் நாட்டின் அடிப்படை கட்டமைப்பு எப்படி எல்லாம் மாறி இருக்கும்? பாஜகவில் இருக்கிற பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் பழங்குடி மக்களை பிரதிநிதித்துவப்படுகிற எம்பிக்கள் ஒன்றை உணர வேண்டும்.. ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 50%-க்கும் அதிகமாக இருக்கும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு ஒரு அதிகாரமும் கிடையாது. இங்கே அமர்ந்திருக்கக் கூடிய உங்களால் வாயை கூட திறந்து பேச முடியாது என்பது எனக்கும் தெரியும்.
சர்தார் வல்லபாய் பட்டேல், அம்பேத்கர், நேரு என மறைந்த தலைவர்களைப் பற்றி பேசிக் கொண்டே அவர்கள் குறித்த விழுமியங்களை பாஜகவினர் அழித்துக் கொண்டிருக்கின்றனர். புத்தரின் முன் தலை வணங்கி நிற்கும் நீங்கள் அவரது சித்தாந்தத்தை அழித்துக் கொண்டிருக்கின்றனர். வெறுப்பரசியலும் வன்முறையும் இந்த நாட்டை அழித்துக் கொண்டிருப்பவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.












Click it and Unblock the Notifications