ஓய்வு ஊழியர்களுக்கு மீண்டும் பணி.. இளைஞர்கள் தலையில் இடியை இறக்கிய ரயில்வே.. பரபர உத்தரவு
டெல்லி: ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கி உள்ளது. அதன்படி பாயிண்ட்ஸ் மேன், லோகோ பைலட், தண்டவாள பராமரிப்பு, பொறியாளர், உதவி லோகோ பைலட், ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை ஓய்வு பெற்றவர்களை பயன்படுத்தி நிரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட உள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து துறை என்றால் அது ரயில்வே தான். இந்த துறையை மத்திய ரயில்வே அமைச்சகம் நிர்வகித்து வருகிறது.

ரயில்வேயில் பணி செய்வது என்பது பல இளைஞர்களுக்கும் கனவாக இருந்து வருகிறது. இதனால் தான் ஒவ்வொரு முறையும் ரயில்வே தேர்வில் அதிகமானவர்கள் பங்கெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் ரயில்வேயில் பணி செய்ய வேண்டும் என்ற கனவில் உள்ள இளைஞர்களுக்கு மத்திய அரசு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. அதாவது ரயில்வே துறையில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே வாரியம் சார்பில் அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், ‛‛ரயில்வேயில் பாயிண்ட்ஸ் மேன், லோகோ பைலட், தண்டவாள பராமரிப்பு, பொறியாளர், உதவி லோகோ பைலட், ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களுக்கு ஓய்வு பெற்றவர்களை நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 65 வயதுக்கு உட்பட்ட ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் நியமிக்கலாம்.
பணி ஓய்வுக்கு முந்தைய 5 ஆண்டுகள் வேலையில் நன்னடத்தை சான்று பெற்றவர்களை பணியமர்த்தலாம். அதேபோல்குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படாத பணியாளர்களை நியமிக்க வேண்டும். குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களை நியமிக்க கூடாது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே வாரியத்தின் இந்த உத்தரவு என்பது இளைஞர்களுக்கு பேரதிர்ச்சியை தந்துள்ளது. ஏனென்றால் பாயிண்ட்ஸ் மேன், லோகோ பைலட், தண்டவாள பராமரிப்பு, பொறியாளர், உதவி லோகோ பைலட், ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட பணிகளை பெற இளைஞர்கள் மத்தியில் கடும் போட்டி உள்ளது. ஆனால் தற்போது அந்த பணிகளுக்கு ஓய்வு பெற்றவர்களை நியமிக்கும்போது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது கிடைக்காமல் போகும். ரயில்வே வாரியத்தின் இந்த உத்தரவால் இளைஞர்களுக்கு அதிர்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications