ரயில் கட்டணம், சமையல் கேஸ் சிலிண்டர்.. தற்போது பெட்ரோல்.. மத்திய அரசின் 3 பெரிய அறிவிப்புகள்
டெல்லி: லோக்சபா தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்கிற நிலையில், பயணிகள் ரயில் கட்டணம் குறைப்பு, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு மற்றும் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு என அடுத்தடுத்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு 3 பெரிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது.
2024ம் ஆண்டுக்கான லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதம் தொடக்கத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் 3வது முறையாக வெல்லும் முனைப்பில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக இருக்கிறது. தேர்தல் தொடர்பான அறிவிப்பு அனேகமாக இன்று அல்லது நாளைக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் லோக்சபா தேர்தல் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படும் என்கிற நிலையில் வெறும் 20 நாட்களில் மத்திய அரசு அடுத்தடுத்து 3 பெரிய அறிவிப்புகளை செய்திருக்கிறது. அதுவும் சாமானியர்களை குறிவைத்து இந்த அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது.
பயணிகள் ரயில் கட்டணம்: பயணிகள் ரயில்களில் 2020-ம் ஆண்டில் கொரோனா பாதிப்பு காலம் தொடங்குவதற்கு முன் டிக்கெட் கட்டணம் 10 ரூபாய் ஆக இருந்தது. ஆனால் கொரோனா பாதிப்பு தொடங்கிய போது 200 கிலோ மீட்டருக்குக் குறைவான தூரம் இயக்கப்படும் ரயில்களுக்கு கட்டணம் ஊரடங்கு காரணமாக கடுமையாக அதிகரிக்கப்பட்டது . அதாவது பயணிகள் ரயில்களில் டிக்கெட் கட்டணம் இருமடங்கு உயர்த்தப்பட்டு 30 ரூபாயாக்கப்பட்டது. கொரோனா முடிந்து இயல்பு நிலை திரும்பிய போது கட்டணம் குறைக்கப்படவில்லை.. இந்நிலையில் திடீரென கடந்த பிப்ரவரி 27ம் தேதி குறைக்கப்பட்டது. தற்போது பயணிகள் ரயில்களில் கொரோனா காலத்துக்கு முன்பிருந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சிலிண்டர் விலை குறைப்பு: அடுத்ததாக மகளிர் தினத்தை முன்னிட்டு, வீட்டு சமையல் கேஸ் சிலிண்டர் விலை 100 ரூபாய் குறைக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்களின் நிதிச் சுமையை கணிசமாகக் குறையும், குறிப்பாக நமது பெண் சக்திக்கு பயனளிக்கும் என்றும் சமையல் எரிவாயுவை மிகவும் மலிவு விலையில் வழங்குவதன் மூலம், குடும்பங்களின் நல்வாழ்வை ஆதரிப்பதோடு ஆரோக்கியமான சூழலை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்றும், பிரதமர் நரேந்திர மோடி அன்று வெளியிட்ட ட்வீட் பதிவில் கூறினார். மேலும் 100 ரூபாய் சிலிண்டர் விலை குறைப்பு அடுத்த நாளே அதாவது மார்ச் 9ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
பெட்ரோல் டீசல் விலை குறைப்பு: பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு நேற்று அதிரடியாக குறைத்து நேற்று அறிவித்தது.. அதன்படி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 2 ரூபாய் குறைக்கப்படுவதாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் (எக்ஸ்) வெளியிட்டு இருந்தார். இந்த விலை குறைப்பு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்திருக்கிறது. சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.73 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.100.73 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதைப்போல டீசல் விலை சென்னையில் ரூ.94.33-ல் இருந்த நிலையில், இன்று ரூ.92.33 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலை குறைப்பு, சிலிண்டர் விலை குறைப்பு, ரயில் கட்டணம் குறைப்பு என்று மத்திய அரசு வெளியிட்ட இந்த மூன்று அறிவிப்புகளுமே சாமானியர்களை குறிவைத்து வந்ததாகும்.
ப சிதம்பரம் கருத்து : பெட்ரோல் டீசல் விலை குறைப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், கடந்த வாரம் நான், பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படும் என்று சொல்லியிருந்தேன்.. அதன்படி இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டிருக்கிறது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தேர்தலுக்குப் பிறகு இதன் விலை உயர்த்தப்படமாட்டாது என்று இந்த அரசு சொல்லுமா? பாஜக அரசால் சமையல் சிலிண்டர் விலை 700 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதன்பிறகு தேர்தலுக்கு முன்னதாக 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதே சாதுரியத்தை பெட்ரோல் மற்றும் டீசல் விலையிலும் கையாண்டிருக்கிறது" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications