சில மாநிலங்களில் 3ஆம் அலை தொடங்கிவிட்டது.. பள்ளிகள் திறப்பு பாதுகாப்பானதா? ஐசிஎம்ஆர் புதிய வார்னிங்
டெல்லி: நாட்டிலுள்ள சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது கொரோா 3ஆம் அலையின் அறிகுறியாக இருக்கலாம் என இந்திய மருத்துவ ஆய்வு கழகத்தின் தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் டாக்டர் சமிரான் பாண்டா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா பாதிப்பு இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. கடந்த சில வாரங்களாகவே நாட்டில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரம் என்ற அளவிலேயே இருந்து வருகிறது.
கடந்த ஆண்டு இந்தியாவில் தொடங்கிய கொரோனா பாதிப்பு இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. குறிப்பாகக் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஏற்பட்ட 2ஆம் அலை இந்தியாவில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் டெல்டா கொரோனா இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. 3ஆம் அலை குறித்தும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இது குறித்து ஐசிஎம்ஆர் ஆய்வாளர் முக்கிய தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

அனைத்து மாநிலங்களும் ஒன்று இல்லை
இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் டாக்டர் சமிரான் பாண்டா இது குறித்து கூறுகையில், "கொரோனா பாதிப்பைப் பொறுத்தவரை நாம் ஒட்டுமொத்தமாக இந்தியாவில் எத்தனை பேருக்குப் பாதிப்பு எனப் பார்க்கக் கூடாது. அதற்குப் பதிலாக மாநில வாரியாக கொரோனா பாதிப்பு எப்படி உள்ளது என்பதை நாம் பார்க்க வேண்டும். ஏனென்றால் இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் ஒரே மாதிரியானவை அல்ல.

2ஆம் அலை
டெல்லி மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து படத்தை கற்ற நாட்டின் பிற மாநிலங்கள் கொரோனா கட்டுப்பாடுகளை விதித்தும், வேக்சின் பணிகளும் வேகப்படுத்தியும் 2ஆம் அலை பாதிப்பை மோசமாகாமல் பார்த்துக் கொண்டன. இதனால் தான் பல மாநிலங்களில் இரண்டாவது அலை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அதேநேரம் இது 3ஆம் அலைக்கான வாய்ப்பையும் ஏற்படுத்திவிட்டது.

3ஆம் அலையின் தொடக்கம்
இதனால் தற்போது சில மாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு மூன்றாவது அலையைத் தொடக்கமாகவும் இருக்கலாம். தங்கள் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எப்படி இருக்கிறது என்பதை ஒவ்வொரு மாநிலமும் ஆராய வேண்டும். முதல் மற்றும் 2ஆம் அலையை ஒப்பிட்டு அதன் அடிப்படையில் 3ஆம் அலையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

பள்ளிகள் திறப்பு
பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் இது குறித்துப் பேசிய டாக்டர் சமிரான் பாண்டா, "இது குறித்து நாம் அச்சப்படத் தேவையில்லை. நான்காவது தேசிய சிரோ சர்வே-இல் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான குழந்தைகள் ஆன்டிபாடிகள் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே, நாம் அச்சமடையத் தேவையில்லை தேவையில்லை.

கவனம் தேவை
பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், இதர ஊழியர்களுக்கு நாம் முதலில் தடுப்பூசி போட வேண்டும். கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்ற வேண்டும். கொரோனா வழிகாட்டுதல்கள் என்றால் என்ன என்பது குறித்தும் மாணவர்களுக்கு நாம் விளக்க வேண்டும். இவை தவிரப் பள்ளி திறப்பில் எந்த பிரச்சினையும் இல்லை. அதேநேரம் 2ஆம் அலை தீவிரமாக ஏற்படாத மாநிலங்களில் 3ஆம் அலை தீவிரமாகத் தாக்க வாய்ப்புள்ளதால் அந்த மாநிலங்களில் பள்ளிகள் படிப்படியாகவே திறக்கப்பட வேண்டும், "என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications