இனி அவ்வளவுதானா? முடக்கப்படும் ராகுலின் ‛எக்ஸ்’ பக்கம்? தேர்தல் ஆணையத்தில் பாஜக பரபர புகார்! பின்னணி
டெல்லி: ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் தான் ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் குறித்து இன்று ராகுல் காந்தி போட்ட பதிவால் அவரது எக்ஸ் வலைதள பக்கம் முடக்கப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதோடு ராகுல் காந்திக்கு எதிராக இந்திய தேர்தல் ஆணையத்தில் பாஜக பரபரப்பான புகாரை அளித்துள்ளது.
ராஜஸ்தானில் மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இன்று ஒரே கட்டமாக அங்கு சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. மக்கள் ஆர்வமாக வந்து தேர்தலில் ஓட்டளித்து செல்கின்றனர். இன்று பதிவாகும் ஓட்டுக்கள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

ராஜஸ்தானில் தற்போது காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்தது. அசோக் கெலாட் முதல்வராக இருந்தார். இதனால் இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் கட்சியினர் உள்ளனர். அதேவேளையில் காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் தோல்வியடையும், நிச்சயம் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என பாஜகவினர் நம்புகின்றனர்.
இதற்கிடையே தான் இன்றயை ஓட்டுப்பதிவு தொடங்கியவுடன் காங்கிரஸ், பாஜக தலைவர்கள் ராஜஸ்தான் மக்களிடம் அனைவரும் ஓட்டுப்போட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்பட பல அரசியல் தலைவர்கள் தங்களின் எக்ஸ் வலைதளத்தில் ராஜஸ்தான் தேர்தல் தொடர்பாக பதிவுகள் செய்திருந்தனர்.
இதில் ராகுல் காந்தி போட்ட பதிவு என்பது விவாதத்தை கிளப்பியது. அதாவது ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் 5 முக்கிய வாக்குறுதிகளை குறிப்பிட்டு இருந்தார். அதாவது காங்கிரஸ் கட்சி வாக்குறுதிகளாக அளித்து இருந்த காஸ் மானியம், விவசாய கடன் தள்ளுபடி, ஆங்கில வழி கல்வி, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட விஷயங்களை குறிப்பிட்டு இருந்தார். இதுதான் விவாதத்தை கிளப்பியது.
அதாவது ராஜஸ்தானை பொறுத்தமட்டில் கடந்த 48 மணிநேரத்துக்கு முன்பாகவே பகிரங்க பிரசாரம் என்பது முடிந்துவிட்டது. ஆனால் தேர்தல் நாளில் ராஜஸ்தானின் நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவராக இடம்பறெ்ற ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளை பட்டியலிட்டு ஓட்டு சேகரிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை காலை 10.30 மணியளவில் 2 லட்சத்து 30 ஆயிரத்து 900 பேர் பார்த்துள்ளனர்.
ராகுல் காந்தியின் இந்த செயல் என்பது தேர்தல் நடத்தை விதி 126ன் கீழ் குற்றமாகும். இதனால் அவரது எக்ஸ் வலைதள பக்கத்தில் இந்த பதிவை நீக்கம் செய்ய வேண்டும். அதோடு அவரது எக்ஸ் பக்கத்தை முடக்கம் செய்ய வேண்டும். இதுதொடர்பாக எக்ஸ் நிறுவனத்துக்கு கடிதம் எழுத வேண்டும் என பாஜக சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது வரை இந்திய தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தில் நடவடிக்கை என்பது எடுக்கவில்லை. இருப்பினும் பாஜக அளித்த புகாரால் இந்த விவகாரம் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. அதோடு பாஜகவினர் அளிக்கும் புகாரில் ராகுல் காந்தி அடிக்கடி பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறார். சமீபத்தில் கூட அவர் தனது எம்பி பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். அதன்பிறகு நீதிமன்றத்தை நாடி பதவியை திரும்ப பெற்றார். அந்த வகையில் தற்போதும் பாஜகவினர் அளித்துள்ள புகாரால் ராகுல் காந்தி மீது இந்திய தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications