டெல்லி அதிகாரிகள் நியமன மசோதா.. ஆதரவாக விழுந்த 131 வாக்குகள்! எதிராக எவ்வளவு! 7 முக்கிய பாயிண்டுகள்
டெல்லி: தலைநகர் டெல்லியில் அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான மசோதா ராஜ்யசபாவில் வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது. இது குறித்து முக்கிய பாயிண்டுகளை பார்க்கலாம்.
யூனியன் பிரதேசமான டெல்லியில் ஆளும் கட்சியாக இருந்தாலும், ஆம் ஆத்மியால் விரும்பிய அனைத்தையும் செய்ய முடிவதில்லை. போலீஸ் உள்ளிட்ட முக்கிய துறைகளில் மத்திய அரசுக்கே இருக்கிறது. இதைத் துணை நிலை ஆளுநர் கண்காணிப்பார்.

இதற்கிடையே டெல்லி குடிமைப் பணி ஊழியர்களை நியமனம் செய்யும் விவகாரத்தில் கெஜ்ரிவால் அரசுக்கும் துணை நிலை ஆளுநருக்கும் மோதல் ஏற்பட்டது. துணை நிலை ஆளுநர் நியமனம் குறித்த முடிவுகளை எடுத்தார்..
மசோதா: இது குறித்து ஆம் ஆத்மி தொடர்ந்து வழக்கில் சில மாதங்களுக்கு முன்பு முக்கிய தீர்ப்பு வந்தது. அதாவது அதிகாரிகளை இடமாற்றம் செய்யவும் நியமிக்கவும் மாநில அரசுக்கே முழு அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பு அளித்தது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் மத்திய அரசு அவசர சட்டத்தைக் கொண்டு வந்தது. அதாவது அதிகாரிகளின் நியமனங்களைக் கண்காணிக்க 2 அதிகாரிகள் மற்றும் டெல்லி முதல்வரைக் கொண்ட குழு அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது.
இது டெல்லி அரசின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையிலும் சுப்ரீம் கோர்ட் அளித்த உத்தரவையே ரத்து செய்யும் வகையில் இருப்பதாகப் பல எதிர்க்கட்சிகள் சாடின. புதிதாக உருவான "இந்தியா" கூட்டணியும் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த மசோதா ஏற்கனவே லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று அது ராஜ்யசபாவிலும் நிறைவேறியது. இது குறித்து முக்கியமான பாயிண்டுகளை பார்க்கலாம்.

1 இந்த மசோதா மதியம் ரஜ்ய சபாவில் கொண்டு வரப்பட்டது. சுமார் 6 மணி நேரம் இந்த மசோதா மீது விவாதம் நடைபெற்றது. இதில் பல்வேறு தலைவர்களும் பல முக்கிய கருத்துகளைத் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து இரவில் நடந்த வாக்கெடுப்பில் இந்த மசோதா நிறைவேறியது.
2 இதில் மத்திய அரசுக்கு ஆதரவாக 131 வாக்குகள் பதிவானது. அதேபோல மத்திய அரசுக்கு எதிராக 102 வாக்குகள் பதிவானது. இருப்பினும், நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம், ஆந்திரப் பிரதேசத்தின் ஆளும் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் இதில் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்தால் மசோதா எளிமையாக நிறைவேறியது. இது
3 இந்த மசோதாவுக்கு எதிராகப் பேசிய ஆம் ஆத்மி எம்பி ராகவ் சதா, "டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வேண்டும் என்று விரும்பியவர்களே பாஜகவின் வாஜ்பாயும் எல்.கே. அத்வானியும் தான். இப்போதுள்ள பாஜக அவர்களின் சொந்தத் தலைவர்களைப் பின்பற்ற வேண்டும். டெல்லியில் தொடர்ச்சியாகப் பல தேர்தல்களில் தோல்வியடைந்ததால் இப்படி அதிகாரத்தைப் பெற முயல்கிறார்கள்" என்றார்.

4 அதேபோல காங். மூத்த தலைவர் ப. சிதம்பரம் பேசுகையில், "இந்த மசோதாவை நிறைவேற்ற பாஜகவுக்கு அரசியலமைப்பு ரீதியாகவோ அல்லது தார்மீக ரீதியாகவோ அதிகாரம் இல்லை.. நீங்கள் டெல்லியில் வென்று 25 ஆண்டுகள் ஆகிறது. உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. காஷ்மீரில் இவர்கள் செய்ததே (சிறப்பு அந்தஸ்து ரத்து) இப்போது நீதிமன்றத்தில் இருக்கிறது" என்றார்.
5 இந்த மசோதா உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறும் வகையில் இருப்பதாக விமர்சனம் எழுந்த நிலையில், அமைச்சர் அமித் ஷா அதை நிராகரித்தார். இது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மீறவில்லை என்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே பாஸ் என்றும் தெரிவித்தார்.
6 இந்த மசோதாவை காங்கிரஸ் எதிர்க்க முகாந்திரமே இல்லை என்று குறிப்பிட்ட அமித் ஷா, இப்போது கூட்டணியில் இருக்கிறோம் என்ற ஒரே காரணத்திற்காக ஆம் ஆத்மியை காங்கிரஸ் ஆதரிப்பதாகத் தெரிவித்தார்.
7 இந்த மசோதாவால் ஆம் ஆத்மி தான் அதிகம் பாதிக்கப்படும்.. இதன் மூலம் டெல்லியில் அதிகாரிகள் நியமனம் செய்யும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி அரசிடம் இருந்து பறிக்கப்படும்.












Click it and Unblock the Notifications