10 எம்.பிக்களை தேர்ந்தெடுக்க ராஜ்யசபா தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம்.. யார் பதவியெல்லாம் காலி?
டெல்லி: 10 ராஜ்ய சபா இடங்களுக்கு வரும் ஜூலை 24ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேற்கு வங்கம் - 6, குஜராத் - 3 கோவா - 1 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவா, குஜராத் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 10 ராஜ்ய சபா உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகிற ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் நிறைவடைகிறது.

இதனை தொடர்ந்து, காலியாகவுள்ள அந்த 10 ராஜ்ய சபா இடங்களுக்கு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கு தேர்தல் ஆணையம் முடிவு செய்து உள்ளது. இதன்படி, கோவா, குஜராத் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் காலியாகவுள்ள 10 ராஜ்ய சபா இடங்களுக்கான தேர்தல் வரும் ஜூலை 24ஆம் தேதி நடத்தப்படுகிறது.
இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் வருகிற ஜூலை 24ஆம் தேதியன்றே நடத்தப்படும். காலியாகவுள்ள இந்த இடங்களுக்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கு வருகிற ஜூலை 13ஆம் தேதி கடைசி நாள், வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி ஜுலை 17 என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்காலம் நிறைவடையவுள்ள 10 எம்.பிக்களில் டெர்ரிக் ஓ பிரையன் (மேற்கு வங்கம்) மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் (குஜராத்) உள்ளிட்டோர் முக்கியம் வாய்ந்தவர்கள் ஆவர்.
குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்.பி.க்களான ஜெய்சங்கர், தினேஷ்சந்திரா ஜெமல்பாய் அனவாடியா, லோகந்த்வாலா ஜுகல்சிங் மாதுர்ஜி ஆகியோரின் பதவிக்காலம் ஆகஸ்ட் 18ஆம் தேதியுடன் முடிவடைகிறது. பாஜக சார்பில் கோவாவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட, வினய் டி. டெண்டுல்கரின் பதவிக்காலம் ஜூலை 28-ம் தேதியுடன் முடிவடைகிறது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி.க்களான டெர்ரிக் ஓ பிரையன், டோலா சென், சுஷ்மிதா தேவ், சாந்தா சேத்ரி மற்றும் சுகேந்து சேகர் ரே ஆகியோரின் பதவிக்காலமும், அதே போல் காங்கிரஸ் எம்.பி பிரதீப் பட்டாச்சார்யாவின் பதவிக்காலமும் ஆகஸ்ட் 18ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால், காலியாகும் 10 இடங்களுக்குத் தான், ஜுலை 24ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில், நான்கு மாநிலங்களில் 8 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. காங்கிரஸ் ராஜஸ்தானில் 3 இடங்களைத் தக்க வைத்துக் கொண்டது. பாஜக, ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவில் தலா ஒரு இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி லூயிசின்ஹோ ஜோகிம் ஃபலேரோ ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து காலியான ராஜ்யசபா இடத்திற்கும் ஜுலை 24ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications