நெகிழ வைத்த முதல் சந்திப்பு! பிரதமர் மோடிக்கு 27 ஆண்டாய் ராக்கி கட்டும் பாகிஸ்தான் பெண்! பிளாஷ்பேக்
டெல்லி: ரக்ஷா பந்தனையொட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடந்த 27 ஆண்டுகளாக பாகிஸ்தானை சேர்ந்த கமார் மொசின் ஷேக் எனும் பெண் அவருக்கு ராக்கி கட்டியும், பார்சலில் அனுப்பியும் சகோதரத்துவ பாசத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த பெண் யார்?, இவருக்கும் பிரதமர் மோடிக்கு இடையேயான சகோதரத்துவ பாசத்தின் துவக்க புள்ளி எது? என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
Recommended Video
சகோதரத்துவ பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் இன்று ரக் ஷா பந்தன் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. சகோதரிகள் தங்களின் சகோதரர்களுக்கு ராக்கி கட்டி வருகின்றனர். தொலைதூரத்தில் உள்ள சகோதரிகள் தங்களின் சகோதரர்களுக்கு ராக்கி அனுப்பி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடிக்கு எல்லைகளை கடந்து பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 27 ஆண்டுகளாக ராக்கி அனுப்பி வருகிறார். அதுபற்றிய விபரம் வருமாறு:

பாகிஸ்தானை பெண்ணின் சகோதரத்துவம்
பாகிஸ்தானை சேர்ந்தவர் கமர் மொசின் ஷேக். இவர் ஆண்டுதோறும் பிரதமர் நரேந்திர மோடிக்கு ராக்கி அனுப்பி ரக்ஷா பந்தன் கொண்டாடி வருகிறார். இந்த ஆண்டும் பிரதமர் நரேந்திர மோடிக்கு ராக்கி அனுப்பி தனது ரக்ஷா பந்தன் வாழ்த்தை தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் மோடி 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற வாழ்த்தும் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடிக்கு இந்த முறை அனுப்பிய ராக்கி பற்றி அவர் கூறுகையில், ‛‛பிரதமர் மோடிக்கான ராக்கியை ரேஷ்மி ரிப்பன் மூலம் எம்ப்ராய்டரி முறையில் நானே தயாரித்து அனுப்பினேன். பிரதமர் மோடி உடல் நலத்துடன் நீண்ட காலம் வாழ வேண்டும் என வாழ்த்தி கடிதம் எழுதியுள்ளேன். அடுத்த முறையும் அவர் தான் நாட்டின் பிரதமராக வருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் அதற்கு தகுதியானவர். அனைத்து முறையும் அவர் வெற்றி பெற்று நாட்டின் பிரதமராக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். டெல்லி வரும் போது அவரை நேரில் சந்திப்பேன் என நம்புகிறேன்'' என்றார்.

27 ஆண்டு பந்தம்
மேலும் பிரதமர் மோடிக்கும், கமர் மொஹ்சின் ஷேக்கிற்கும் இடையேயான பந்தம் குறித்து அவர் கூறும்போது, ‛‛ரக்ஷா பந்தனையொட்டி நான் கடந்த 27 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடிக்கு ராக்கி அனுப்பி வருகிறேன். மேலும் அவரது ஆரோக்கியத்திற்காகவும், அரசியல் வெற்றிக்காகவும் பிரார்த்தனை செய்து வருகிறேன்.

சந்திப்பு நிகழ்ந்தது எப்படி
நான் 27 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் முதல் முதலாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தேன். பாஜக மூத்த தலைவரும், எம்பியுமான திலீப் சங்கனியின் வீட்டுக்கு நானும் எனது கணவரும் சென்றிருந்தோம். திலீப் சங்கனி எம்பி என்பதால் அவருக்கு அரசு சார்பில் வீடு வழங்கப்பட்டு இருந்தது. அந்த வேளையில் மோடியும் அங்கு இருந்தார். அப்போது பிரதமர் மோடியை சந்தித்தோம்.

எப்படி இருக்கிறீர்கள் சகோதரி?
இந்த வேளையில் எங்களை அறிமுகம் செய்து கொண்டோம். அப்போது அவர் பணிவான முறையில் "எப்படி இருக்கிறீர்கள் சகோதரி? என கேட்டார். இது என்னை மிகவும் கவர்ந்தது. அடுத்த சில நாட்களில் ரக்ஷா பந்தன் வந்தது. இந்த நாளில் சகோதரிகள் தங்களின் சகோதரர்களுக்கு ராக்கி கட்டுவதை அறிந்தேன். இதையடுத்து நானும் நரேந்திர மோடிக்கு ராக்கி கட்டி சகோதர பாசத்தை வெளிப்படுத்தினேன். அதன்பிறகு ஒவ்வொரு வருடமும் இந்த ரக்ஷா பந்தன் தினத்தில் தொடர்ந்து ராக்கி அனுப்பி வருகிறேன்'' என்றார். கமார் மொசின் ஷேக்கின் பூர்வீகம் பாகிஸ்தானாக இருந்தாலும் கூட அவர் தனது திருமணத்துக்கு பிறகு இந்தியாவில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications