‛‛மோடியும், ராவணனும் ஒன்று தான்’’.. ராமர் பால பிரச்சனையை கையில் எடுத்த சு.சாமி.. கடும் ‛அட்டாக்’
டெல்லி: ராமர் பாலத்தின் தொடக்கமாக கருதப்படும் ராமநாதபுரம் மாவட்டம் அரிச்சல்முனையில் பிரதமர் மோடி இன்று மலர்தூவி கடலை பார்த்து வணங்கினார். இந்நிலையில் தான் ராமர் பாலத்தை ஏன் பிரதமர் மோடி தேசிய நினைவு சின்னமாக அறிவிக்க தயங்குகிறார்? எனக்கேள்வி கேட்டு பிரதமர் மோடியையும், ராவணனையும் ஒப்பிட்டு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த விழாவில் பிரதமர் மோடி ராமர் சிலைக்கு சடங்குகள் செய்து தரிசனம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னதாக ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பிரதமர் மோடி 11 நாட்கள் விரதம் தொடங்கி கடைப்பிடித்து வருகிறார். மேலும் அவர் ராமாயணத்துடன் தொடர்புடைய கோவில்களுக்கு சென்று வருகிறார். அந்த வகையில் கேரளா, ஆந்திரா, தமிழ்நாட்டில் உள்ள கோவில்களுக்கு பிரதமர் மோடி சென்றார்.
தமிழ்நாட்டுக்கு 3 நாள் பயணமாக வந்த பிரதமர் மோடி நேற்று பிரதமர் மோடி திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் 22 தீர்த்தங்களில் நீராடி ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் செய்தார். அதன்பிறகு இன்று அரிச்சல்முனையில் ராமர் பாலத்தின் தொடக்கம் என கூறப்படும் இடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி கடலை பார்த்து வணங்கினார். அதன்பிறகு ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோவிலில் அவர் தரிசனத்தை முடித்து மதுரை சென்று அங்கிருந்து டெல்லி புறப்பட்டார்.
டெல்லியில் இருந்து நாளை காலையில் அவர் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று கும்பாபிஷேகத்தில் பங்கேற்க உள்ளார். இந்நிலையில் தான் ராமர் பாலத்தின் தொடக்க இடமாக கூறப்படும் அரிச்சல்முனைக்கு பிரதமர் மோடி சென்ற நிலையில் அவரை பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அதாவது தேஜஸ் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ராமர் பாலத்தை பாதுகாக்கும் நடவடிக்கையாக தலைமுறை தலைமுறையாக சுப்பிரமணியசாமி நினைவில் வைக்கப்படுவார்'' என தெரிவித்து இருந்தார். இந்த பதிவுக்கு சுப்பிரமணியன் சாமி பதிலளித்துள்ளார். அந்த பதிவில் தான் அவர் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக சுப்பிரமணியன் சாமி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‛‛மோடி ஏன் இன்னும் ராமர் பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிப்பதில் தாமதம் செய்து வருகிறார்? ஏனென்றால் மோடியும், ராவணன் போன்றவர் தான். மோடி இந்து கடவுள்கள் முன்பு தரிசனம் செய்வார் ஆனால் அவரது செயல் என்பது அசூரன் போன்று இருக்கும்'' என விமர்சனம் செய்துள்ளார்.
ராமர் பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிக்க கோரி சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மேலும் இதுதொடர்பாக அவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications