ஜனாதிபதி பற்றி சர்ச்சை.. காங். எம்பி ஆதிர் ரஞ்சன் பேசியது என்ன? லோக்சபாவில் பாஜக எம்பிக்கள் அமளி
டெல்லி: இந்தியாவின் புதிய ஜனாதிபதியான திரெளபதி முர்மு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு கேட்க வேண்டும் எனக்கூறி நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பாஜக எம்பிக்கள் பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய ஜனாதிபதி தேர்தலுக்கு பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரெளபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் திரெளபதி முர்மு வெற்றி பெற்றார்.
இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் கடந்த 24ம் தேதி முடிவடைந்த நிலையில் நாட்டின் 15வது ஜனாதிபதியாக திரெளபதி முர்மு கடந்த 25ம் தேதி பதவியேற்றார். புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற திரெளபதி முர்முவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

காங்கிரஸ் குழு தலைவர் சர்ச்சை
இதன்மூலம் இந்தியாவின் முதல் பழங்குடி பெண் ஜனாதிபதி என்ற பெருமையை திரெளபதி முர்மு பெற்றுள்ளார். இந்நிலையில் தான் திரெளபதி முர்முவை காங்கிரஸ் கட்சியின் எம்பியும், லோக்சபா காங்கிரஸ் குழு தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசியது சர்ச்சையாகி உள்ளது. அதாவது திரெளபதி முர்முவை 'ராஷ்டிரபத்னி' எனக்கூறி அவர் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

பாஜக பெண் எம்பிக்கள் போராட்டம்
இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு எதிரான பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக பெண் எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், சோபா கரந்தலாஜே உள்ளிட்டவர்கள் தலைமையில் பெண் எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆதிர் ரஞ்சனுக்கு எதிராக கோஷம்
அப்போது ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஜனாதிபதி திரெளபதி முர்மு மற்றும் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோஷமிட்டனர். அதோடு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி இருந்தனர். இந்த போராட்டம் நாடாளுமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி நிர்மலா சீதாராமன் கூறுகையில், ‛ஆதிர் ரஞ்சன் தனது செயலுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்' என காட்டமாக தெரிவித்தார்.

நாடாளுமன்றத்திலும் எதிர்ப்பு
மேலும் ஆதிர் ரஞ்சனின் இந்த கருத்து நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. திரெளபதி முர்மு குறித்து தரக்குறைவாக கருத்து தெரிவித்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நாடாளுமன்றம் மற்றும் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆக்ரோஷமாக பேசியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications