மோடி அரசின் மாபெரும் சாதனை.. பெண்கள், தாழ்த்தப்பட்ட & பழங்குடியினர்.. அதிகளவில் ஆளுநர்களாக நியமனம்
டெல்லி: இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் தான் அதிகளவில் தாழ்த்தப்பட்ட & பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்களும் பெண்களும் அதிகம் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் அமைச்சரவை இன்று மாற்றப்படவுள்ளது. புதிய அமைச்சர்கள் குறித்த அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாக வாய்ப்புள்ளது.
இன்று புதிதாக 20 அமைச்சர்கள் பதவி ஏற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் பெண்கள், சிறுபான்மையினருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆளுநர்கள் மாற்றம்
இந்நிலையில், அமைச்சரவை மாற்றத்திற்கு முன் நேற்று கர்நாடகா உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். அதில் மத்திய சமூக நீதித் துறை அமைச்சராக உள்ள தாவர்சந்த் கெலாட் கர்நாடகா மாநில ஆளுநராக நியமனம் செய்து அறிவிப்பு வெளியானது. இதுபோக ஹரியானா, திரிபுரா, இமாச்சல் பிரதேசம், மிசோரம், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட், கோவா ஆகிய மாநிலங்களின் ஆளுநர்களும் மாற்றப்பட்டனர்.

மோடி அரசு
இதன் மூலம் வரலாற்றிலேயே தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பிரிவை சேர்ந்த அதிக நபர்களை ஆளுநர்களாக நியமித்த அரசு என்ற மாபெரும் சாதனையை மோடி அரசு செய்துள்ளது. இந்தியாவில் இப்போது தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த நான்கு பேர் ஆளுநர்களாக உள்ளனர். தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த தவார்சந்த் கெஹ்லோட் கர்நாடக ஆளுநராகவும், ராஜேந்திர அர்லேகர் இமாச்சல் ஆளுநராகவும் , நாராயண் ஆர்யா திரிபுரா ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ராணி மவுரியா ஏற்கனவே உத்தரகண்ட் ஆளுநராக உள்ளார்.

பழங்குடியினர்
அதேபோல பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பேர் ஆளுநர்களாக உள்ளனர். அதன்படி மத்தியப் பிரதேச ஆளுநராக மங்குபாய் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அனுசுயா சத்தீஸ்கர் மாநில ஆளுநராக உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்களும் கணிசமான அளவில் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பெண்கள்
பெண்கள் பிரதிநிதித்துவம் என்று எடுத்துக் கொண்டால் கடந்த 2014ஆம் ஆண்டு மோடி அரசு பதவியேற்றது முதல் மொத்தம் எட்டு பெண்கள் ஆளுநர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக மன்மோகன் சிங் ஆட்சியில் ஆறு பெண்களும் வாஜ்பாய் ஆட்சியில் ஒருவரும் ஆளுநராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல தற்போது நியமிக்கப்பட்டுள்ள 8 பெண்களில் 5 பேர் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்தவர்களாகும்

மாபெரும் சாதனை
இது பிரதமர் மோடி அரசின் முக்கிய சாதனைகளில் ஒன்றாக உள்ளது. இன்று மத்திய அமைச்சரவையும் மாற்றப்படவுள்ள நிலையில், அதிலும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் பிரதிநிதித்துவமும் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications