இந்து மதத்தை விட்டு 10,000 பேருடன் பவுத்தம் தழுவிய டெல்லி மாஜி அமைச்சர்- திருமாவளவன் நேரில் பாராட்டு
டெல்லி: இந்துமதத்தை விட்டு 10,000 பேருடன் பவுத்த மதத்தை தழுவியதால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ராஜேந்திர பால் கவுதமை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான தொல். திருமாவளவன் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.
டெல்லியில் கடந்த 5-ந் தேதி அசோக விஜயதசமி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்து மத்தை விட்டு வெளியேறி 10,000 பேர் பவுத்த மதத்துக்கு மாறினர். இந்நிகழ்வில் இந்து கடவுள்கள் மீது நம்பிக்கை கிடையாது என்கிற உறுதி மொழி ஏற்கப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பாஜக எதிர்ப்பு
இந்த மதமாற்ற நிகழ்ச்சியில் டெல்லி சமூக நலத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பால் கவுதம் பங்கேற்றார். இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அத்துடன் ராஜேந்திர பால் கவுதமை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்யவும் வலியுறுத்தியது.

குஜராத்தில் நெருக்கடி
தற்போது குஜராத் சட்டசபை தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது அங்கும் இந்த விவகாரம் எதிரொலித்தது. குஜராத் கல்வி அமைச்சர் ஜிது வகானி கூறுகையில் இந்து தெய்வங்களை ஆம் ஆத்மி அமைச்சர் அவமதித்துவிட்டார் என சாடியிருந்தார். குஜராத் தேர்தல் களத்திலும் இது பெரிய விவகாரமாக எதிரொலித்தது. குஜராத் தேர்தல் களத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது.

ராஜேந்திர பால் ராஜினாமா
இதனால் ராஜேந்திர பால் தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த ராஜேந்திரபால் கவுதம், பவுத்த மதத்தில் எனக்கு நம்பிக்கை உள்ளது. இதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை? ஒருவர் விரும்பிய மதத்தை பின்பற்றும் உரிமையை நமது அரசியல் சாசனம் அனைவருக்கும் வழங்கியுள்ளது. நான் எந்த மதத்துக்கும் எதிராகப் பேசவில்லை என்றார்.

திருமாவளவன் சந்திப்பு
இந்த நிலையில் டெல்லியில் ராஜேந்திர பால் கவுதமை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நேற்று நேரில் சந்தித்து மாலை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திருமாவளவன், அண்மையில் டெல்லியில் 10,000பேர் பௌத்தம் தழுவிய நிகழ்வை முன்னின்று நடத்திய #AAP அமைச்சர் @AdvRajendraPal அவர்கள், பாஜக எதிர்ப்பையடுத்து தனது பதவியை உதறினார். அவரைச் சந்தித்துப் பாராட்டினோம். அவரது இல்லத்திலிருந்து அம்பேத்கர் நினைவிடம் வரை நடக்கும் பேரணியில் பங்கேற்கிறோம் என குறிப்பிட்டுள்ளார். திருமாவளவனின் இந்த ட்விட்டர் பதிவு சமூக வலைதளங்களில் விவாதங்களை உருவாக்கி உள்ளது.












Click it and Unblock the Notifications