கரூர் துயரம்! விஜய்யின் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்ப்பா? பொய்யான தகவல்! மறுத்த நிர்மல் குமார்
டெல்லி: கரூர் சம்பவத்தில் விஜய்யின் பெயர் குற்றப்பத்திரிகையில் இணைக்கப்படவுள்ளது என்ற தகவல்கள் எல்லாம் வதந்திகள் என தவெக இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யிடம் சிபிஐ விசாரணை நிறைவடைந்துள்ளது. அந்த சம்பவம் குறித்து எங்கள் தரப்பு விளக்கத்தை அளித்தோம்.

மேலும் அடுத்த கட்ட விசாரணைக்கு ஆஜராகுமாறு விஜய்க்கு சம்மன் ஏதும் இல்லை. எனவே விஜய்யிடம் விசாரணை நிறைவடைந்துவிட்டது. மேலும் காலை முதல் விஜய்யிடம் சிபிஐ நடத்திய விசாரணை குறித்து வெளியான பல்வேறு தகவல்கள் தவறானவை.
மேலும் கரூர் சம்பவத்தில் விஜய்யின் பெயரும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படும் என ஊடகங்களில் வெளியான தகவலும் வதந்தி. கரூர் சம்பவத்திற்கு காரணம் செந்தில் பாலாஜி என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார்.
அப்படியிருக்கும் போது விஜய்யிடம் சிபிஐ விசாரணை நடத்தப்பட்ட போது என்னென்ன கேள்விகள் கேட்கப்பட்டன என சில ஊடகங்கள் பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளன. இவ்வாறு நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 27 அன்று கரூரில் நடந்த ஒரு பிரசார கூட்டத்தில், தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, இந்த வழக்கை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரித்து வருகிறது.
முதலில் கரூரில் தங்கி விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், இப்போது இந்த வழக்கோடு தொடர்புடைய அனைவரையும் டெல்லியில் உள்ள தங்கள் தலைமை அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில், தவெக தலைவர் விஜயிடம் கடந்த ஜனவரி 12 அன்று 7 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. இன்றும் சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரசார வாகனத்தில் நின்று பேசிய விஜய், கூட்ட நெரிசலைக் கவனிக்கவில்லையா, நிகழ்ச்சியில் 7 மணி நேர தாமதம் ஏன் ஏற்பட்டது, நெரிசலின்போது என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, வாகனம் ஏன் முன்னோக்கி நகர்த்தப்பட்டது போன்ற பல கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டதாக பல்வேறு டிவி ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
சில கேள்விகளுக்கு விஜய் பதிலளித்தார். ஆனால், ஒரு சிலவற்றிற்குப் பதிலளிக்க அவகாசம் கேட்டிருக்கிறாராம். அவர் அளித்த பதில்களுக்குத் தேவையான ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமாறு சிபிஐ அறிவுறுத்தியுள்ளது.
விஜய் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, பிப்ரவரி மாதத்தின் இரண்டாம் வாரத்தில் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐ முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அந்தக் குற்றப்பத்திரிகையில் விஜயின் பெயரையும் சேர்க்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலைத்தான் நிர்மல் குமார் மறுத்துள்ளார். மேலும் அடுத்த கட்டமாக விஜய்யிடம் விசாரணை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications