"செருப்பை கழற்றி.." அப்பாவுக்கு கிட்னி கொடுத்தது தப்பா? தேஜஸ்வி மீது லாலு மகள் பகீர் குற்றச்சாட்டு
பாட்னா: பீகாரில் ஆர்ஜேடி கட்சி மிக மோசமான ஒரு தோல்வியைச் சந்தித்தது. இதற்கிடையே லாலு பிரசாத் யாதவின் மகளான ரோஹிணி ஆச்சார்யா, தனது குடும்பத்துடனான உறவுகளைத் துண்டித்துக்கொண்டு, அரசியல் வாழ்விலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தன்னை அவமதித்துச் செருப்பால் அடிக்கவும் கூட முயற்சிகள் நடந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
பீகார் தேர்தலில் ஆர்ஜேடி படுதோல்வி அடைந்தது. கடந்த தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக இருந்த ஆர்ஜேடி இந்த முறை வெறும் 25 இடங்களில் மட்டுமே வென்றது. இந்த மாபெரும் தோல்வி ஆர்ஜேடி கட்சியைத் திணறடித்துவிட்டது என்றே சொல்லலாம்.

லாலு மகள் பரபரப்பு
இதற்கிடையே லாலு பிரசாத் யாதவின் மகளான ரோஹிணி ஆச்சார்யா, தனது குடும்பத்துடனான உறவுகளைத் துண்டித்துக்கொண்டு, அரசியல் வாழ்விலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தான் எடுத்த இந்த முடிவுக்குச் சகோதரர் தேஜஸ்வி யாதவ் தான் காரணம் என்றும் அவர் தெரிவித்தார். குடும்பத்திலிருந்து தன்னை அவர்கள் பிரித்துவிட்டதாக ரோஹிணி ஆச்சார்யா குற்றஞ்சாட்டினார்.
தனக்கு எதிராகத் தரக்குறைவான வார்த்தைகள் பயன்படுத்தியதாகவும் ஒரு கட்டத்தில் செருப்பால் அடிக்கவும் கூட முயற்சி நடந்ததாகவும் அவர் தெரிவித்தார். தேஜஸ்வி யாதவின் நெருங்கிய உதவியாளர்களான சஞ்சய் யாதவ் மற்றும் ரமீஸ் ஆகியோரைக் குற்றம்சாட்டிய ரோஹிணி, அரசியல் வாழ்விலிருந்து விலகுவதாகவும், தனது குடும்பத்தைத் துறப்பதாகவும் அறிவித்தார்.
செருப்பால் அடிக்க முயற்சி
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், "நேற்று ஒரு மகள், ஒரு சகோதரி, ஒரு மனைவி, ஒரு தாய் அவமதிக்கப்பட்டாள். கேவலமான வார்த்தைகளால் திட்டப்பட்டாள். செருப்பால் அடிக்கவும் முயன்றனர். என் சுயமரியாதையை நான் விட்டுக்கொடுக்கவில்லை.. அப்போதும் உண்மையை நான் விட்டுக் கொடுக்கவில்லை.. அதனாலேயே இந்த அவமானத்தைத் தாங்க வேண்டியிருந்தது.. நேற்று வேறு வழியின்றி, கண்ணீர்விட்டு நின்ற பெற்றோரையும் சகோதரிகளையும் விட்டுப் பிரிந்து வந்தேன். என் தாய் வீட்டிலிருந்து என்னைப் பிரித்துவிட்டனர்... என்னை அனாதையாக்கிவிட்டார்கள்" என்று பதிவிட்டார்.
சில நிமிடங்களிலேயே அவர் இன்னொரு போஸ்ட்டை பகிர்ந்தார். அதில் அவர், "நேற்று அவர்கள் என்னை சபித்தனர்.. பல கோடி பணத்தை வாங்கிய பிறகே எனது தந்தைக்கு நான் கிட்னி கொடுத்தேன் என்றார்கள். லோக்சபா சீட் வாங்கிய பிறகே கிட்னியை கொடுத்ததாகவும் சொன்னார்கள்.
கிட்னி தானம்
திருமணமான அனைத்து மகள்களுக்கும், சகோதரிகளுக்கும் நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். உங்களுக்குச் சகோதரன் இருந்தால்.. நீங்கள் கடவுளாக நினைக்கும் தந்தையைக் கூட காப்பாற்ற நினைக்காதீர்கள். மாறாக, உங்கள் சகோதரனிடம் அவரது கிட்னியையோ அல்லது அவனுடைய நண்பர்களுடைய கிட்னியையோ தானம் செய்யச் சொல்லுங்கள்.
அனைத்துப் பெண்களும் தங்கள் சொந்தக் குடும்பத்தை பார்த்துக்கொள்ள வேண்டும். தங்கள் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள வேண்டும். பெற்றோர்களைப் பற்றிக் கவலைப்படாமல், குடும்ப நலனைப் பற்றி மட்டும் யோசிக்க வேண்டும். நான் என் குடும்பத்தையும், என் மூன்று குழந்தைகளையும் கவனிக்காமல்.. என் கணவர் அனுமதியில்லாமல் சிறுநீரகம் தானம் செய்தது எனக்கு ஒரு பெரும் பாவமாகிவிட்டது. நான் கடவுளாக நினைக்கும் எனது தந்தையைக் காப்பாற்ற நான் செய்த செயலை வைத்தே என்னைத் திட்டுகிறார்கள். யாரும் இந்த தவறை செய்யாதீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
பரபர குற்றச்சாட்டு
மருத்துவரான ரோஹிணி ஆச்சார்யா, சிங்கப்பூரில் தனது கணவருடன் வசித்து வந்தார். கடந்த ஆண்டு பீகாரின் சரண் தொகுதியில் லோக்சபா தேர்தலில் அவர் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். தனது சகோதரர் உடனான மோதல் குறித்து நேற்றைய தினம் வெளிப்படையாகக் கருத்து கூறினார். நேற்று ரோஹிணி பேசுகையில், "நான் அரசியலில் இருந்து விலகுகிறேன், என் குடும்பத்தைத் துறக்கிறேன். சஞ்சய் யாதவ் மற்றும் ரமீஸ் இருவருக்கும் இதுதான் தேவை.. எல்லாப் பழிகளையும் நான் ஏற்கிறேன்.
எனக்குக் குடும்பம் இல்லை. நீங்கள் எதுவாக இருந்தாலும் தேஜஸ்வி யாதவ், சஞ்சய் யாதவ் மற்றும் ரமீஸ் ஆகியோரிடம் கேளுங்கள். அவர்கள்தான் என்னைக் குடும்பத்திலிருந்து வெளியேற்றினார்கள். அவர்கள் எந்தப் பொறுப்பையும் ஏற்க மறுக்கிறார்கள். பீகார் தேர்தலில் ஏன் இவ்வளவு மோசமான தோல்வி என்று ஒட்டுமொத்த நாடும் கேட்கிறது. ஆனால், பதில் இல்லை.. சஞ்சய் யாதவ் மற்றும் ரமீஸ் ஆகியோரின் பெயர்களை நீங்கள் குறிப்பிட்டால் கூட, நீங்கள் அவமதிக்கப்படுவீர்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications