இத்தனைக்கும் மோடியே திறந்து வச்சது.. ராமர் கோயில் டூ டெல்லி விமான நிலையம் வரை.. சர்ச்சைகளின் லிஸ்ட்
டெல்லி: கடந்த மார்ச் மாதம் பிரதமர் நரேந்திர மோடியால் டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1 திறந்து வைக்கப்பட்ட நிலையில், தற்போது அதன் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார், 6 பேர் வரை காயமடைந்துள்ளனர். ஏற்கெனவே மோடி திறந்து வைத்த அடல் சேது பாலம், ராமர் கோயில் உள்ளிட்டவை சேதமடைந்திருந்த நிலையில், இன்று நடந்த விபத்து பாஜக மீது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் நேற்றிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை பெய்த கனமழை பல இடங்களில் வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சில பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருக்கிறது. மேற்கு டெல்லியில் ஹரி நகர், பிகாஜி காமா பிளேஸ் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வெள்ளமாக தேங்கி வீடுகளுக்குள் புகுந்திருக்கிறது. தாழ்வான பகுதிகளில் நிற்க வைக்கப்பட்டிருந்த கார்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன.

மறுபுறம் டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 1-ன் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்துள்ளது. அதிகாலை 5.30 மணிக்கு இந்த விபத்து நடந்திருக்கிறது. பயணிகளை அழைத்து செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மீது இந்த கூரை விழுந்ததால் கார்கள் அப்பளம் போல நொருங்கியுள்ளன. சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 6 பேர் காயமடைந்துள்ளனர்.
டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1 சமீபத்தில் விரிவாக்கப்பட்டிருந்தது. இதனை கடந்த மார்ச் மாதம் 10ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்திருந்தார். இப்படி இருக்கையில் தற்போது இதன் மேற்கூரை இடிந்து விழுந்திருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த பல திட்ட பணிகள் இதேபோல சேதமடைந்திருக்கின்றன என எதிர்க்கட்சியினர் சோஷியல் மீடியாவில் விமர்சித்து வருகின்றனர். ஒரிரு நாட்களுக்கு முன்னர் ராமர் கோயில் சன்னதியில் மழைநீர் ஒழுகிய விவகாரம் பெரியதாக வெடித்திருந்தது.

லோக்சபா தேர்தலின்போது ராமர் கோயில் பரபரப்பாக பேசப்பட்டது. ராமருக்கு கோயில் கட்டுவது என்பது பல நூறு ஆண்டுக்கால கனவு என்றும், இந்த கனவு பாஜக ஆட்சியில் நிறைவேறியுள்ளது என்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் ஊர் ஊராக பிரசாரம் மேற்கொண்டிருந்தனர். குடிசையில் இருந்த ராமரை கோபுரத்திற்கு கொண்டு வந்தது பாஜகதான் என்றும், ராமர் கோயிலை கட்டியதன் மூலம் பொற்காலம் தொடங்கிவிட்டதாக குழந்தை ராமரே கூறுவது போல் உணர்ந்தேன் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.
இப்படியாக லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக ராமர் கோயில் திறந்து வைக்கப்பட்டது. கோயில் முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை என்றாலும் கூட, கோயில் திறந்து வைக்கப்பட்டது அரசியல் ஆதாயத்திற்காகதான் என்று பல்வேறு தரப்பினரும் விமர்சித்தனர்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை ராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் கனமழை பெய்திருக்கிறது. இந்த மழை காரணமாக கோயிலுக்குள் தண்ணீர் தேங்கியிருக்கிறது. மழை நீர் வடிய வடிகால் அமைப்பை கூட செய்யவில்லை என்றும், கருவறையிலேயே மழை நீர் ஒழுகுகிறது என்றும் கோயிலின் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

கோயில் கட்டுவதில் அலட்சியம் காட்டப்பட்டதாக குற்றம்சாட்டிய அவர், மழைநீர் தேங்காதவாறு உடனடியாக நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்த குற்றச்சாட்டையடுத்து கோயில் கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா கோயிலுக்கு வந்து, மழைநீர் கசியும் பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் கசிவை சரி செய்யும்படி கட்டுமான குழுவுக்கு வலியுறுத்தினார்.
அதேபோல கடந்த 22ம் தேதி அடல் சேது பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததும் விமர்சனங்களை கிளப்பியிருந்தது. நாட்டிலேயே கடல்மீது கட்டப்பட்ட மிக நீண்ட பாலம் என பெருமையோடு, கடந்த ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடியால் இந்த பாலம் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் முழுதாக 6 மாதம் கூட நிறைவடையாத நிலையில் பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததால் பயணிகள் அதிருப்பதியடைந்தனர்.

அடல் சேது பாலம், ராமர் கோயில் வரிசையில் தற்போது டெல்லி விமான நிலையமும் இணைந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications