அமித்ஷா தந்த மெசேஜ்.. கூரியர் அலுவலகத்தில் ரூ.900 கோடி போதைப்பொருள் பறிமுதல்.. அதிர்ந்த டெல்லி
டெல்லி: டெல்லியில் உள்ள கூரியர் அலுவலகத்தில் போதைப்பொருள் தடுப்பு துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு ரூ.900 கோடி மதிப்பிலான 82 கிலோ கோகைன் போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளனர்.
டெல்லி வழியாக வெளிநாடுகளுக்கு போதைப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இதனை தடுக்க என்சிபி எனும் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு முகமை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் மேற்கு டெல்லியில் இன்று போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு முகமை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
மேற்கு டெல்லியில் உள்ள நங்லோய் மற்றும் ஜனக்புரி பகுதியில் உள்ள கூரியர் அலுவலகங்களில் இந்த சோதனை என்பது நடத்தப்பட்டது. அப்போது அந்த அலுவலகங்களில் இருந்து போதைப்பொருட் பாக்கெட்டுகள் சிக்கின. அதாவது சிறிய சிறிய பாக்கெட்டுகளில் கோகைன் எனும் போதைப்பொருட்கள் இருந்தது.
டெல்லியில் இருந்து ஆஸ்திரேலியா நோக்கி அந்த பொருட்கள் அனுப்பி வைக்கப்பட இருந்த நிலையில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு முகமை அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு என்பது சர்வதேச சந்தையில் ரூ.900 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள் 2 பேரை அதிரடியாக கைது செய்தனர். இந்த சோதனை என்பது போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு முகமை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், இந்திய கடற்படை மற்றும் தீவிரவாத ஒழிப்பு படையினர் இணைந்து 700 கிலோ மதிப்பிலான மெத்தபீட்டமின் எனும் போதைப்பொருளை குஜராத் கடற்கரையில் பறிமுதல் செய்து ஈரான் நாட்டை சேர்ந்த 8 பேரை கைது செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக டெல்லியில் ரூ.900 கோடி மதிப்பிலான 82 கிலோ கோகைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளை பாராட்டியுள்ளார். போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு என்பது மத்திய உள்துறையின் கட்டுப்பாட்டில் வரும். இந்நிலையில் தான் அந்த துறையின் மத்திய அமைச்சராக உள்ள அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
‛‛ஒரே நாளில் அதிகளவு போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது போதைப்பொருள் இல்லாத நாட்டை உருவாக்க மோடி அரசு கொண்டுள்ள உறுதியை வெளிப்படுத்தும் நோக்கில் இருக்கிறது. டெல்லியில் 82.53 கிலோ ஹை கிரேட் கோகைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கூரியர் மையங்களில் பறிமுதல் செய்யப்பட்ட இந்த போதைப்பொருட்களின் மதிப்புஎன்பது ரூ.900 கோடியாக இருக்கிறது. போதைப்பொருட்களுக்கு எதிரான தேடுதல் வேட்டை தொடரும். போதைப்பொருள் கட்டுப்பாடு முகமை அதிகாரிகளுக்கு வாழ்த்துகள்'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications